சீர்காழி: தமிழர்களின் தொன்மை நாகரிகத்துக்கான அடையாளங்களை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான பூம்புகாரில் போதுமான பராமரிப்பு இல்லாததால், இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பூம்புகார், தமிழ்க்குடியின் தொன்மைச் சிறப்புகளை பறைசாற்றும் பழைமையான ஊர். சிலப்பதிகார நாயகன் கோவலனும், காப்பிய நாயகி கண்ணகியும் வாழ்ந்த ஊர். குடகு மலையில் தோன்றும் காவிரி, பல பகுதிகளைக் கடந்து கடலில் சங்கமிக்கும் ஊர்.
காவிரிப்பூம்பட்டினம், சோழப்பட்டினம் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்ட பூம்புகாரின் சிறப்புகள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை ஆகிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.
பண்டைய பூம்புகாரை கடல் கொண்டது என்பது வரலாறு. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய முன்னோடி நகரமாகவும், பன்னாட்டுத் துறைமுகமாகவும் விளங்கிய பூம்புகாரின் தொன்மையை வெளிக்கொணர கடந்த 1910-ஆம் ஆண்டிலிருந்து அங்கு மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை மூலம் நில அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் தொல்லியல் துறை, தேசிய கடலாய்வு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பூம்புகார் கடற்கரையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் 70 அடி ஆழத்தில் 5 கட்டடப் பகுதிகள் கண்டறியப்பட்டன. இதேபோல, தரைதட்டி உடைந்த 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கப்பல் மூழ்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.
பூம்புகார் கடற்கரையில் கடந்தகால வரலாற்றுச் சான்றுகளைச் சுற்றுலாப் பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் சிலப்பதிகாரக் கலைக்கூடம், பாவை மன்றம், இளஞ்சி மன்றம், நெடுங்கல் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, சுற்றுலாத் துறையின் பராமரிப்புக்கு அளிக்கப்பட்டன. மேலும், சிறுவர் பூங்கா, கலங்கரை விளக்கம் ஆகியனவும் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கடற்கரையோரம் உள்ள சிற்பக்கலைக்கு சான்றாக விளங்கும் நெடுங்கல் மண்டபமானது ஒரே கல் தூணில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்தத் தூண்களில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால், நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி கருங்கல் தூண் சிதிலமடைந்து வருகிறது.
சில சமூக விரோதிகள் இந்த நெடுங்கல் மண்டபத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு கண்ணாடிப் புட்டிகளை மண்டபத்திலேயே உடைத்துவிட்டுச் செல்கின்றனர். இதேபோல், பாவை மன்றத்தின் வளாகத்திலும் உடைந்த மதுப் புட்டிகள் அதிகம் கிடக்கின்றன.
சிலப்பதிகாரக் கலைக்கூடம் பகுதியில் உள்ள செயற்கை நீரூற்றுகள் செயல்படாமல் உள்ளன. கலைக்கூடத்தின் உள்ளேயும் போதிய மின் விளக்குகள், மின் விசிறிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் திருப்தியாகப் பார்வையிட முடியாத சூழல் உள்ளது. கண்ணகி சிலையைச் சுற்றியுள்ள அலங்கார விளக்குகளும், கடற்கரைப் பகுதியில் உள்ள மின் விளக்குகளும் சரிவர ஒளிர்வதில்லை. இதனால், மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழல் உள்ளது.
சிறுவர் பூங்கா இருந்த அடையாளம் கூடத் தெரியாத வகையில் சறுக்குமரம், ராட்டினம், இருக்கைகள் ஆகியவற்றை செடி, கொடிகள் ஆக்கிரமித்து காடுபோலக் காட்சியளிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இருக்க வேண்டிய கோவலன், கண்ணகி நுழைவுவாயில் வளைவுகளில் அரசமரச் செடிகள் முளைத்துள்ளன.
2004-ஆம் ஆண்டில் சுனாமி பாதிப்புக்கு அடையாளமாக, பூம்புகார் கடற்கரையோரம் பயணிகள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட சங்குவீடுகள் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிக்கின்றன.
சுற்றுலாத் துறை சார்பில் ஒவ்வொரு மன்றத்தையும் பார்வையிட பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பராமரிப்பு மட்டும் இல்லை.
கடற்கரையோரங்களில் துப்புரவுப் பணிகள் செய்யப்படுவதில்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. ஊராட்சி சார்பில் பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை.
இத்தகைய குறைபாடுகளால் பூம்புகாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை மட்டும் கண்டு களித்துவிட்டு, திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், பூம்புகாரின் வரலாற்றை பறைசாற்றும் எந்த விஷயத்தையும் சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
பூம்புகாரின் வரலாற்று பொக்கிஷங்களை உரிய முறையில் பராமரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.