ரௌடிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ள ரௌடிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ரௌடிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் தீபாவளியை முன்னிட்டு 3.34 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதன்படி அரியாங்குப்பம், பாகூரில் குடும்ப அட்டைகளுக்கு இலவச சர்க்கரை வழங்கும் பணியை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் அரசின் முன் இரண்டு பணிகள் உள்ளன. சட்டம் ஒழுங்கு, பராமரிப்பு, மக்களுக்கான திட்டங்களை சீராக நிறைவேற்றுவதாகும். காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பின் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டுள்ளது.
குறிப்பாக முந்தைய ஆட்சியில் ரௌடிகள், சமூகவிரோதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவர்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது.
ரௌடிகள் நடமாட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சிறையில் உள்ள ரௌடிகள் தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை ஏற்க முடியாது.
இதுபோல் மிரட்டி பணம், பறித்த ரௌடிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளோம். விரைவில் கணக்கெடுப்பு முடிந்து, ரௌடிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கிறோம் எனத்தெரிந்தாலே ரௌடிகள் தங்கள் செயல்பாட்டை நிறுத்தி விடுவர்.
காரைக்காலில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் தரப்படும். காரைக்காலிலும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.