தமிழ்நாடு

இணையதளங்கள் மூலம் திருட்டுப் பொருள்கள் விற்பனை அமோகம்!

பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளங்களில் திருட்டுப் பொருள்கள் தொடர்ந்து விற்கப்படுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.வாசுதேவன்

பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளங்களில் திருட்டுப் பொருள்கள் தொடர்ந்து விற்கப்படுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய அவசர வாழ்க்கையில் வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பதற்குரிய வாய்ப்புகளை மக்கள் தேடுகின்றனர். இதையே ஒவ்வொரு தொழில் நிறுவனமும் தங்களுக்குரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி, இணையதளம் சேவை சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அண்மைக்காலமாக பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்தே தங்களிடம் உள்ள பழைய பொருள்களை இணையதளம் மூலம் விற்பதும், தங்களுக்குத் தேவையான பழைய பொருள்களை இணையதளம் மூலம் வாங்குவதும் தற்போது பரவலாகி வருகிறது. இதனால், பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளங்களில் செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணினி, மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள், பர்னிச்சர் வகைகள் ஆகியவையே அதிகமாக விற்கப்படுகின்றன.

பொருளை விற்பவரும், வாங்குபவரும் தங்களுக்கு இடையே எந்தத் தரகரும் இன்றி நேரடியாக விலை பேசி தங்களது பொருளை விற்பதால், இரு தரப்புக்கும் நினைத்ததைவிட அதிகப் பலன் கிடைப்பதாக இதன் பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே, இந்த இணையதளங்களுக்கு வரவேற்பு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

திருட்டுப் பொருள்கள்: அதேவேளையில், இத்தகைய இணையதளங்களில் திருட்டுப் பொருள்களும் அதிகளவில் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சென்னையில் இந்த இணையதளங்களின் வாயிலாக திருட்டுப் பொருள்களை விற்றதாக கடந்த 6 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் திருடப்படும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்கள், கார்கள், செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள் ஆகியவை இந்த இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இணையதளம் மூலம் விற்றவர் மீதும், பொருளைத் திருடியவர் மீதும் வழக்குப்பதியும் போலீஸார், மோசடிக்குப் பயன்படுத்தப்படும் இணையதளம் மீது எந்த வழக்கும் பதிவு செய்வதில்லை. இத்தகைய இணையதளங்கள் மீது சட்டப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இதனால், இணையதளம் சார்ந்த குற்றங்களில், இந்த மோசடி வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், இதுவிஷயத்தில் மக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு காவல் துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, விற்கப்படும் பொருளை நேரடியாக ஆய்வு செய்யாமல், பணப் பரிமாற்றம் செய்யக் கூடாது, பொருளைப் பெறுவதற்கு முன்னதாக பணப் பரிமாற்றம் செய்யக் கூடாது என காவல் துறை அறிவுறுத்தி வருகிறது.

"இந்த விதிமுறைகளை இணையதளங்களும் செயல்படுத்த முன்வந்தால், இத்தகைய மோசடிக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கலாம். மேலும், பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கினால், இத்தகைய குற்றங்களை ஓரளவு தடுக்கலாம். உதாரணமாக, அசல் விற்பனைச் சான்றிதழ், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே, பொருள்களை வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்' என இணையதளப் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை தேவை

"திருட்டுப் பொருள்களை விற்கும் இணையதளங்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடிப் பிரிவு சட்டம் ஆகியவற்றின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதை முறையாகப் பயன்படுத்தி, திருட்டுப் பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்யும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்" என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்தகைய இணையதளங்களின் நிர்வாகிகள் விஷயத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்காமல், காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பணத்தை இழந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது. இத்தகைய நடவடிக்கை மூலமே, இதுபோன்ற மோசடியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT