காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சியில் நடைபெற்ற உண்ணாநோன்பு போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் வழமைப்பட்ட அணிச் சார்புகள் இல்லாமல், ஓரணியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தன்னை புதிய தோற்றத்துடன் மக்கள் மன்றத்தில் முன்நிறுத்த இந்த உண்ணாநோன்பு உதவியிருக்கிறது.
உண்ணாநோன்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தகுமார், பிரின்ஸ் மற்றும் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்காத முக்கிய நபர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமே.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தியதில் காங்கிரஸின் பங்கு கணிசமாக இருந்தபோதிலும், கர்நாடகத்தில் காங்கிரஸ்தான் ஆளும்கட்சியாக இருக்கிறது என்பதையும் யாரும் கேள்வி எழுப்பும் முன்பாகவே, ""காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டிக்கும் போராட்டமாக மாற்றியது தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரின் திறமை.
விவசாயப் பிரச்னையை முன்வைத்து நடத்தும் மாநிலந்தழுவிய போராட்டம் என்பதால். தன் செல்வாக்கை கட்சியினரிடையே உணர்த்தும் விதமாகவும் இதனை திருநாவுக்கரசர் பயன்படுத்திக்கொண்டார். தொடக்கவுரையில் பேசிய திருநாவுக்கரசர், இந்த போராட்டம் தொடக்கம்தான், தமிழக மக்கள் நலன்காக்க பல்வேறு போராட்டங்களை இனி காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்லும் என்றார். "இதுவரை இருந்த தலைவர்கள் போல இல்லாது, கட்சிக்காக தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துதான் எடுக்கப்படும்" என்றும் கூறினார்.
காங்கிரஸில் இதுவரை இருந்த கோஷ்டிபூசல் இனி வேண்டாம்; இனி அனைவரும் இணைந்து செயல்படுவோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவோம் என்பதை மையப்படுத்தி அவரது பேச்சு அமைந்திருந்தது.
நிகழ்வில் பேசிய தலைவர்களில் குறிப்பாக, ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன் போன்றோர், இது நல்ல தொடக்கம், இது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது, இது தொடர வேண்டும் என்று பேசினர். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார். அவர் தலைமையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமியும், மக்கள் பிரச்னைகளை நாம் முன்னெடுத்து செல்லாமல் விட்டதால்தான், மக்களுக்கும் நமக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. தற்போது மக்கள் பிரச்னைக்காக போராட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் குறிப்பிட்டார்.
இதைத்தவிர, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான இடப்பங்கீடு குறித்து கட்சியினரிடையே மனநிறைவு இல்லாத நிலையில், ""மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் பதவியிடங்கள் சின்னங்கள் சார்பில்லாதவை. இந்த இடங்களுக்கு கூட்டணி தேவையில்லை. எனவே, காங்கிரஸார் இப்பதவியிடங்களுக்கு போட்டியிட வேண்டும், தேர்தலில் வெற்றி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. போட்டியிடுவது முக்கியம்'' என்று திருநாவுக்கரசர் பேசியது, திமுகவுக்கு ஒரு புதிய அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அத்தகைய அழுத்தம் தரும் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்.
கட்சிச் சின்னம் இல்லாமல் போட்டியிடப்படும் பதவிகள் குறித்து அரசியல் கட்சியினரோ, காங்கிரஸாரோ அறியாதது அல்ல. ஆனால், அதை ஏன் வலிந்து குறிப்பிட வேண்டும்?, வெற்றி கிடைக்காவிட்டாலும், போட்டியிடுங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை என்ன?
திமுகவுடன் கூட்டணி அமைந்து, போதுமான இடங்கள் கிடைக்காத நிலையில், கட்சிச்சின்னம் இல்லாத பதவிகளுக்கு காங்கிரஸார் போட்டியிடுவர். இதுவரை நீடித்து வந்த, எல்லா பதவிப் போட்டிகளுக்கும் கூட்டணி என்ற உள்ளுறை கூட்டணி தர்மம் இம்முறை பொருந்தாது என்பதை அப்பட்டமாக தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.