கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இளைஞரின் ஒருதலைக் காதல் தொல்லையால் செவிலியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அருகேயுள்ள பூதாமூர் ஏனாதிமேட்டைச் சேர்ந்த செல்லமுத்து மகள் புஷ்பலதா (21). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த புஷ்பலதாவை, அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் (22) வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி, மானபங்கப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதனால், புஷ்பலதா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு புஷ்பலதா வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தனசேகர் சரணடைந்தார்.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலர்கள் தலைமையில், புஷ்பலதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தனசேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புஷ்பலதாவின் உடலை வாங்க மறுத்தும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விழுப்புரம் ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி எர்னெஸ்ட், டிஎஸ்பி சுருளிராஜன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள், இதுகுறித்து கடலூர் மாவட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு உயிரிழந்த செவிலியர் புஷ்பலதாவின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், புஷ்பலதாவின் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.