தமிழ்நாடு

போதிய அலுவலர்கள் இன்றிச் செயல்படும் தகவல் ஆணையம்

மாநில தகவல் ஆணையத்தில் 3 தகவல் ஆணையர்கள் உள்பட 10 சதவீத அளவுக்கு அலுவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

எஸ். பாண்டியன்

மாநில தகவல் ஆணையத்தில் 3 தகவல் ஆணையர்கள் உள்பட 10 சதவீத அளவுக்கு அலுவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மேல்முறையீடு மனுக்களை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்கள் நலத் திட்டங்கள், அரசு சேவைகளில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை வெளிப்படையாக மக்கள் அறிந்து கொள்ளவும், அவற்றில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும் தகவல் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின்படி தகவல் பெற விரும்புவோர் 16(1)-இ பிரிவின் கீழ், ரூ. 10-க்கான வரைவோலை அல்லது அஞ்சல் அலுவலகத்தில் ரூ. 10 கட்டணம் செலுத்தி அந்தந்தப் பகுதி அரசு அலுவலகங்களுக்கு கடிதம் மூலம் தகவல் கோரினால் ஒரு மாதத்துக்குள் அந்தத் தகவலை அனுப்ப வேண்டும் என்பது விதிமுறையாகும். அதிலும், அத்தியவாசியமான பணிகளுக்கு ஒரு நாளிலேயே தகவல் தெரிவிக்க வேண்டும் என அந்தச் சட்டத்தில் உள்பிரிவு அறிவுறுத்துகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் மாநில தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் அளிக்கப்பட்ட தகவல் உண்மையற்றவையாக இருந்தால், மீண்டும் 19 (1) பிரிவின் கீழ் முதல் மேல்முறையீடு மனு அளிக்கலாம். இதிலும் திருப்தியில்லாதபட்சத்தில் மாநில தகவல் ஆணைய அலுவலகத்துக்கு 19(3)-இன் கீழ் ஏற்கெனவே அளித்த மனு நகல்களை இணைத்து மேல்முறையீடு மனு அளிக்கலாம்.
ஆள்கள் பற்றாக்குறை: இதுபோன்ற மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கவும், விசாரணைக்காகவும் இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் 80 முதல் 100 பேர் வருகின்றனர். இதேபோல, வாரத்தின் முதல் நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தலைமைத் தகவல் ஆணையர் உள்பட தகவல் ஆணையர்கள் 9 பேர் தலா 15 முதல் 20 மனுக்களை விசாரித்து பைசல் செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில் 3 தகவல் ஆணையர்கள் இடம் காலியாக உள்ளதால், மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து வகைப்படுத்தும் பணிகளைக் கவனிப்பதற்கான அலுவலர்களில் 10 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், வழக்கு விசாரணைக்கு வருவதிலும், மனுதாரர்களுக்கு தீர்ப்பு கிடைப்பதிலும் தாமதமாகிறது எனத் தகவல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அடிப்படை வசதி: இதுகுறித்து தகவல் ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேல்முறையீட்டு மனுக்கள் அளிக்கவும், வழக்கு விசாரணைக்காகவும் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் மாநில தகவல் ஆணையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில், இவர்களுக்குத் தேவையான இட வசதி, குடிநீர், சுகாதார வளாகம், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை இல்லாத நிலையே உள்ளது.
மேலும், போதுமான அதிகாரிகள், அலுவலர்கள் இல்லாததால் விசாரணை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. விசாரணையின் போது நேரில் ஆஜராவது தொடர்பான கடிதம் மனுதாரர்களுக்குத் தாமதமாகக் கிடைக்கிறது.
இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆஜராக முடியாத நிலை உள்ளது. எனவே, இதைத் தவிர்க்கும் வகையில், செல்லிடப்பேசியில் குறுந்தகவல்களை உடனுக்குடன் அனுப்புவதற்கு தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
அரசுக்குப் பரிந்துரை: இந்தப் பிரச்னைகள் குறித்து தகவல் ஆணைய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
இந்த வளாகத்தில் அமருவதற்கு இடப் பற்றாக்குறை உள்ளது. இதேபோல, மேல்முறையீட்டு மனுக்களை வகைப்படுத்தவும், விசாரணை செய்யவும் அதிகாரிகள், அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதுகுறித்தும், இட வசதி தொடர்பாகவும் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும் தேதி குறித்து மனுதாரர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT