தமிழ்நாடு

ஜெயலலிதா நலம் பெற ரஜினிகாந்த், வைரமுத்து வாழ்த்து

DIN

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தன் சுட்டுரை பக்கத்தில், "அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், விஷால், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர், முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு விவசாயி மகனின் வேண்டுகோள் - வைரமுத்து: தமிழக முதல்வர் விரைவில் முழு நலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில், ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது. அவருக்கு நன்றி. தன் சுட்டுரை பக்கத்தில் தமிழக முதல்வர் உடல்நலம் பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர், அவரது உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழக முதலவரின் உடல்நலக் குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது.
ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதை கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவது இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல. ஆகவே சட்டத்துக்கும், மரபுரிமைக்கும் இணங்க தமிழக விவசாயிகளுக்குக் கர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.
உலகத் துயரங்களில் மிகவும் வலி தருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான். உரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும், கர்நாடகம் அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம்.
தமிழக முதல்வரின் நலத்தில் அக்கறைக் கொண்ட கர்நாடக முதல்வர், தமிழகத்தின் நலத்திலும் அக்கறைகாட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT