தமிழ்நாடு

சில தினங்களில் வீடு திரும்புவார் முதல்வர் ஜெயலலிதா

DIN

முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஓரிரு நாள்களில் வீடு திரும்பி, தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார். வெளிநாட்டுச் சிகிச்சை அவருக்கு அவசியமில்லை. அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்திதான் என்று அவருக்குச் சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
முதல்வரின் உடல் நலம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கம் அளித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில், டாக்டர்கள் சிவகுமார், பாமா (மருத்துவ இயக்குநர்) சுப்பையா விஸ்வநாதன் (தலைமை அதிகாரி), வெங்கட், ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் செப்டம்பர் 22ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அடுத்த நாளான செப்டம்பர் 23 ஆம் தேதி அன்றே காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, வழக்கமான உணவை அவர் உட்கொண்டு வருகிறார்.
முதல்வரின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. அவருக்குத் தேவையான மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்படும் ஒருவருக்கு என்னென்ன மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுமோ அந்தப் பரிசோதனைகள் முதல்வருக்கு செய்யப்பட்டன.
அவரது உடல்நிலை நன்கு முன்னேற்றமடைந்து வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார். விரைந்து குணமடைந்து வரும் நிலையில் மேலும் சில தினங்கள் ஓய்வு எடுக்கவும், மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து இன்னும் ஓரிரு நாள்களில் மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான அலுவல்களை தொடங்க உள்ளார்.
இதற்கிடையே, சிகிச்சைக்காக முதல்வர் வெளிநாடு செல்ல உள்ளார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவை முற்றிலும் தவறானவை. வெளிநாட்டில் சிகிச்சைக்குச் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பேட்டியின்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர்கள் வருகை: முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வரைச் சந்திக்க நாள்தோறும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், துரைக்கண்ணு, தங்கமணி, வேலுமணி, சரோஜா, வளர்மதி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ராம மோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT