சம்ஸ்கிருதம் திணிப்பு, குருகுலக் கல்விக்கு புதுவை மாநில அரசு எதிர்ப்பு: முதல்வர் நாராயணசாமி
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சம்ஸ்கிருதம் திணிப்பு, குருகுலக் கல்வி முறைக்கு புதுச்சேரி மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சம்ஸ்கிருதம் திணிப்பு, குருகுலக் கல்வி முறைக்கு புதுச்சேரி மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மாநில அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி, மாநில அரசின் கருத்திற்காக அனுப்பி வைத்துள்ளது. அமைச்சரவையில் இதுதொடர்பாக முழுமையாக விவாதிக்கப்பட்டது. பள்ளி கல்வி கொள்கை, கல்லூரி கல்வி கொள்கை குறித்து பரிசீலனை செய்து புதுவை மாநிலத்திற்கு ஏற்ப அதை நடைமுறைப்படுத்த கருத்துக்கள் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுத்தோம்.
சமஸ்கிருதம் திணிப்பு, குருகுலக் கல்வி
இதன்படி சமஸ்கிருதத்தை புதுவை மாநில பள்ளிகளில் கட்டாயமாக புகுத்தக்கூடாது. குருகுல கல்வியை எப்போதும் ஏற்க மாட்டோம். தற்போதுள்ள கல்வி முறையை நாங்கள் முழுமையாக தொடர வேண்டும்.
சிறு பான்மையினரால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அளிக்கப் படும் சலுகைகள் தொடர வேண்டும் என கருத்துக்கள் மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது என்று நாராயணசாமி கூறினார்.