தமிழ்நாடு

மதுரை கீழடி அகழாய்வில் வடமொழி எழுத்துகள்: அடுத்தகட்ட தொடர் ஆய்வுக்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை

DIN

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து உள்ள மண்பானை ஓடுகள் உள்ளிட்ட 5,300 சங்க கால பொருள்கள் கிடைத்துள்ளன.

எனவே அடுத்த கட்ட தொடர் ஆய்வுக்கு மத்திய அரசுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகர் என்று இலக்கியம், தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொல்லியல்துறை அகழாய்வு பெங்களூருப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்புக்குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடியில் 2015 ஜனவரி முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 43 தொல்லியல் குழிகள் இடப்பட்டு ஆய்வை மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் மட்டும் 1800 சங்க கால தமிழர்கள்

பயன்படுத்திய பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் தமிழகத்தில் முதன்முறையாக சங்க கால நகர நாகரீகத்துடன் கூடிய கட்டட அடித்தளம், கால்வாய் அமைப்புகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. சுட்ட செங்கற்களால் ஆன வீட்டுச் சுவர்கள், உறைக் கிணறுகள், திறந்த, மூடிய, உருளை வடிவம் என கால்வாய்களும் கண்டறியப்பட்டன.

எழுத்துகளுடன் உள்ள 32 சுடுமண்பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2ஆவது கட்டமாக 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட 59 குழிகளின் ஆய்வுகளிலும் 3800 அரிய வகை சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதே போல் யானைத் தந்தத்தினால் ஆன தாயக்கட்டைகள், சதுரங்கக் கட்டைகள், பெண்கள் அணியும் காதணிகள், மான் கொம்பினால் ஆன கத்தி போன்ற அமைப்புகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், எழுத்துகளுடன் 39 சுடுமண் பானைகளும் கிடைத்தன. அதில் உள்ள எழுத்துகளை ஆய்வு செய்த போது, உதிரன், சேந்தன், முயன் என தனிப்பட்ட நபர்களது பெயர்களாக அவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பிராகிருதம் எனப்படும் வடமொழி எழுத்துகளும் பானை ஓடுகளில் காணப்படுவதாக ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத்ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: கடந்த 2 ஆண்டுகளில் நாலரை ஏக்கர் பரப்பளவில் 102 குழிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த பரப்பு 50 சென்ட் அளவுதான் இருக்கும். தனியார் நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தொல்லியல்துறை ஆய்வுக்கூடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் ஆய்வு தொடரும் என்றார்.

கடந்த இரு ஆண்டுகளில் தொல்லியல்துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், 2 உதவியாளர்கள், 6 ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வுக்காக 2015-இல் ரூ.25 லட்சமும், 2016 செப்டம்பர் வரை ரூ.30 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது என்றும் தொல்லியல்துறையினர் கூறுகின்றனர்.

இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலேயே கீழடி ஆய்வுதான் மிகச்சிறப்பானதாகும். புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன.

ஆகவே இப்பொருள்களை அங்கேயே வைத்து காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT