ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் இன்று ஆர்.கே.நகர் வருகை
குஜராத்தில் இருந்து மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் ஆர்.கே.நகருக்கு வரவுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
தமிழ்நாடுஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் இன்று ஆர்.கே.நகர் வருகை
குஜராத்தில் இருந்து மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் ஆர்.கே.நகருக்கு வரவுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
குஜராத்தில் இருந்து மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் ஆர்.கே.நகருக்கு வரவுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இதையடுத்து, தேர்தல் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. ஒரு இடைத்தேர்தலுக்கு இவ்வளவு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன், சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்கா உள்ளிட்ட உயரதிகாரிகள், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், பணியாளர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர், சென்னை காவல் ஆணையர் கரண் சின்கா கூறியபோது, 'ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக இதுவரை 145 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து மனோஜ் அகர்வால் என்ற மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் ஆர்.கே.நகருக்கு செவ்வாய்க்கிழமை வரவுள்ளார்' என்றார்.
மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியபோது, 'ஆர்.கே.நகர் தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதுபோன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் மத்திய அரசு ஊழியர் ஒருவர் நுண்பார்வையாளராக நியமிக்கப்படுவார். வாக்காளர்களுக்கு திங்கள்கிழமை முதல் வீடுவீடாக வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது' என்றார் அவர்.
கொடி அணிவகுப்பு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயத்தைப் போக்கவும் ஆர்.கே.நகர் தொகுதியில் திங்கள்கிழமை மாலை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தில் இருந்து தொடங்கி கொருக்குப்பேட்டை கே.என்.எஸ்.டெப்போ வரை இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் துணை ராணுவப் படை வீரர்கள், தமிழக காவல் துறையின் ஆயுதப் படையினர், சிறப்பு அதிரடிப் படையினர் உள்பட 600 பேர் பங்கேற்றனர்.
சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் ஆணையர் எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் ஜோஷி நிர்மல்குமார், துணை ஆணையர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
திங்கள்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு.