முகப்பு
தமிழ்நாடு

போராட்டத்தைக் கைவிட முதல்வர் சார்பில் வேண்டுகோள்: தில்லியில் தமிழக விவசாயிகளுடன் தம்பிதுரை சந்திப்பு

தில்லியில் 21-ஆவது நாளாக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:12 PM
தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை திங்கள்கிழமை சந்தித்த மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
பகிர்:

தில்லியில் 21-ஆவது நாளாக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, நீடித்து வரும் போராட்டத்தை கைவிடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அவர் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.
நான்காவது முயற்சி: தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்பேரில் தில்லிக்கு வந்த தம்பிதுரை, நான்காவது முறையாக ஜந்தர் மந்தருக்கு திங்கள்கிழமை சென்றார். அங்கு போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேசிய அவர், 'தமிழக விவசாயிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசும் அதிமுகவும் உறுதுணையாக இருக்கும். எனவே, போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறுகையில், 'தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதாலும் மக்களவை துணைத் தலைவர் என்ற முறையிலும் விவசாயிகளிடம் அவர்களின் போராட்டத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டேன். ஜனநாயக முறையில் அவர்கள் போராடி வருகின்றனர். அதைத் திரும்பப் பெறுவது குறித்து அவர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்' என்றார்.
திட்டவட்டம்: இருப்பினும், 'தங்களின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கும்வரை போராட்டத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை' என்று அய்யாக்கண்ணு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தலை முடியை பாதி மொட்டை அடிப்பது, எலி கறி உண்பது, உடலில் இலையை கட்டிக் கொள்வது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தங்களின் போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் திங்கள்கிழமை தங்கள் மீசையை பாதி மழித்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய கிஸான் யூனியன் என்ற விவசாய சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஜந்தர் மந்தருக்கு நேரில் வந்து அய்யாக்கண்ணு குழுவினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →