தமிழ்நாடு

அமைச்சர் விஜயபாஸ்கர் சரத்குமாருக்கு வருமான வரித் துறை சம்மன்

DIN

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் திங்கள்கிழமை (ஏப்.10) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்தினர். முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதி, எழும்பூர் தனியார் விடுதிகளில் சோதனை நடைபெற்றது. கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் விவரம், பணம் போன்றவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் திங்கள்கிழமை (ஏப்.10) காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள். மேலும் வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படும். தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் விஜயபாஸ்கர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்று நடிகர் சரத்குமார், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரும் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் மூவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT