அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவானதால் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 20 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், நீலகிரி மாவட்டம் கேத்தி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் அந்தமானில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது:
தென்கிழக்கு அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது.
ஆனால் இந்த மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறினால், கிழக்கு மத்திய திசையில் நகர்ந்து மியான்மரை நோக்கி நகரும்.
அப்போது தமிழகப் பகுதியில் இருந்து ஈரப்பதத்தையும் ஈர்த்துச் சென்றுவிடும். இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றனர்.
8 இடங்களில் சதம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108 டிகிரி பதிவானது.
வெள்ளிக்கிழமையைப் பொருத்தவரை வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். வெப்பத்தின் தாக்கமானது தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 108
வேலூர், திருப்பத்தூர், சேலம் 104
மதுரை, தருமபுரி 103
திருச்சி, பாளையங்கோட்டை 102
கோவை 99
சென்னை 96
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.