முகப்பு
தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்?: டி.டி.வி. தினகரனுக்கு தில்லி போலீஸார் சம்மன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டி.டி.வி. தினகரனிடம் தில்லி போலீஸார் அழைப்பாணை (சம்மன்) அளித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டி.டி.வி. தினகரனிடம் தில்லி போலீஸார் அழைப்பாணை (சம்மன்) அளித்தனர்.
புதன்கிழமை இரவு 11 மணி அளவில் பெசன்ட் நகர், வெங்கடேஸ்வரா நகரில் உள்ள இல்லத்துக்குச் சென்ற தில்லி போலீஸார் அங்கு தினகரனைச் சந்தித்து சம்மனை அளித்தனர்.
இது குறித்த விவரம்: அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையிலான அணி அதிமுக அம்மா என்ற பெயரிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரிலும் செயல்பட்டு வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்ட இந்தப் பிளவினால், அக் கட்சிச் சின்னமான இரட்டை இலையை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு பன்னீர்செல்வம், சசிகலா அணியினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அதிமுக என்ற பெயர், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன் அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தில்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம். இதன் அடிப்படையில் தில்லி நட்சத்திர ஹோட்டலில் தில்லி மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். அவர்தான் இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதற்காக தினகரனிடம் பேரம் பேசியது தெரியவந்ததாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து தில்லி போலீஸார் அந்த அறையில் சோதனை செய்து ரூ.1.30 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும் சுகேஷிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதற்காக தினகரனிடம் ரூ.60 கோடி பேரம் பேசியதாகவும், அதில் முதல் கட்டமாக ரூ.10 கோடியை முன் பணமாகப் பெற்றதாகவும் தெரிவித்தாராம்.
தினகரனிடம் விசாரணை: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்த கட்டமாக டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த தில்லி போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக சென்னைக்கு தில்லி போலீஸார் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தில்லி காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் தில்லி போலீஸார் புதன்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள், புதன்கிழமை நள்ளிரவு பெசன்ட் நகர் வெங்கடேஸ்வரா நகரில் 4-ஆவது தெருவில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்துக்கு வந்தனர்.
அங்கு தினகரன் ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். தில்லி போலீஸார் வந்ததும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டர் தீக்குளிக்க முயற்சி: இல்லத்தின் முன் நின்றிருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். உடனே போலீஸார் பாய்ந்து சென்று அவரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
25 நிமிஷம் விசாரணை: தில்லி போலீஸார் புதன்கிழமை இரவு 10.50 மணிக்கு தினகரன் இல்லத்துக்கு சென்றனர். 11.15 மணிக்கு வெளியே வந்தனர். அவர்களை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கேள்விகேட்க முயன்றபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
தில்லி போலீஸார் தினகரனிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணையை அளித்தனர். அதை தினகரன் பெற்றுக்கொண்டார். பின்னர் அவரிடம் முதல்கட்டமாக விசாரணை செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →