முகப்பு
தமிழ்நாடு

தினகரன் வெளியேற்றம் ஒரு நாடகம்: ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி காட்டம்! 

அதிமுகவிலிருந்து தினகரன் வெளியேற்றம் என்பது சசிகலா குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒரு நாடகம் என்று ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

சென்னை: அதிமுகவிலிருந்து தினகரன் வெளியேற்றம் என்பது சசிகலா குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒரு நாடகம் என்று ஓ.பி.எஸ் அணியினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில், ஓ.பி.எஸ் அணியினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இரு அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை குறித்து பலரும் பேசி வருகின்றனர். அதற்கு முதலில் அம்மா அணி சார்பில் சின்னம் மீட்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆலயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட் என்னும் பிரமானப்பத்திரத்தை திரும்ப பெறவேண்டும்.

அதேபோல சசிகலாவை பொதுச் செயலாளராகவும், டி.டி.வி,.தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் நியமனம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும். அதே போல அவர்கள் இருவரிடமிருந்தும் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் பெற வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு செய்தித்தாள்களில் இடம் பெற வேண்டும்.

அந்த அறிவிப்பில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலலிதா காலங்களில் நடைபெறுவது போன்று அவர்களிருவரிடமும் கட்சிக்காரர்கள் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விபரம்  வெளிவர வேண்டும்.

இதன் பின்னரே நாங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறுவது பற்றி பரிசீலிக்க முடியும்.

முக்கியமான இரண்டாவது கோரிக்கையாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று மாநில அரசின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

அதே போல அம்மா அணியினர் தங்கள் வாய்க்கு வந்ததைபேசி வருகிறார்கள். குறிப்பாக தம்பிதுரை பேசும் பொழுது 'முதல்வராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பார்' என்று தெரிவிக்கிறார். நாங்கள் முதல்வர் பதவியோ அல்லது பொதுச் செயலாளர் பதவியோ கோரவில்லை.

அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் பேசும்பொழுது பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் விதத்தில் பேசுவதுடன், அவர்கள் போனால் போகட்டும் என்ற தொனியில் பேசிவருகிறார். அவமானபடுத்தும் விதத்தில் பேசி   விட்டு பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது நியாயமாகுமா?

அவர்களைப் போன்ற ஊழல்வாதிகளின் கூடாரத்துடன் பேசுவது தொடர்பாக எங்களை கேள்வி கேக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தற்பொழுது கருணாநிதி செயல்படாத நிலையில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிரப்பும் தலைவராக பன்னீர்செல்வம் உருவாகியுள்ளார். எப்பொழுது தேர்தல் நடந்தாலும் பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்.

அதிமுகவிலிருந்து தினகரன் வெளியேற்றம் என்பது சசிகலா குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒரு நாடகம். இதன் பின்னணியில் நடராஜன் மற்றும் திவாகரன் ஆகியோரின் செயல்பாடுகள் உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் எங்களுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இவ்வாறு முனுசாமி தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.