இரட்டை இலை: சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு ஜூன் 16 வரை கால அவகாசம்
இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று ஜூன் 16 வரை கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் 'இரட்டை இலை' தேர்தல் சின்னத்துக்கு உரிமை கோரும் விவகாரத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிமுக "அம்மா' அணி பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதே போல, ஓபிஎஸ் அணி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்விரு தரப்பின் கோரிக்கையை ஏற்று கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரது தலைமையை ஏற்காமல் அக்கட்சியைச் சேர்ந்த பொருளாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனித்துச் செயல்பட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், தமிழக முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் சசிகலா அணியில் இருந்து விலகினர். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் தலைமையில் 10 எம்.பி.க்கள், பாண்டியராஜன் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் அணிக்கு வந்தனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு, அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்துக்கு உரிமை கோரின. ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் தாற்காலிகமாக அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், அக்கட்சியின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தையும் முடக்கியது.
இதையடுத்து, 'இரட்டை இலை' சின்னத்துக்கும் கட்சிக்கும் உரிமை கோரும் விவகாரத்தில் இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வி.கே.சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அவரது வழக்குரைஞர்கள் அளித்த கடிதத்தில், 'கட்சிக்கு உரிமையும் தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்கள், பிரமாணப் பத்திரங்கள் போன்ற ஆவணங்களை சேகரித்து தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.