தமிழ்நாடு

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

DIN

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர், பிரதமருக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
சேலத்தில் உள்ள உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இந்திய உருக்காலை நிறுவனத்தின் வரவுகளுக்கு வலுவூட்டவே இந்த தனியார்மய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. சேலம் உருக்காலையானது உலக அளவில் பெயர் பெற்றதாகும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம், ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை போன்ற மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்பதோ அல்லது தனியார்மயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதோ மாநில மக்களிடையே அதிருப்தியை உருவாக்கும்.
சேலம் மாவட்டம் கஞ்சமலையின் அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக 9 கிராமங்களைச் சேர்ந்த 15.5 சதுர கிலோமீட்டர் பரப்பிலான நிலங்கள் சேலம் உருக்காலையை அமைத்திட கையகப்படுத்தப்பட்டது. இந்த ஆலை ஒரு பொதுத்துறை நிறுவனமாக அமைக்கப்படப் போகிறது என்பதால் இவ்வளவு பெரிய அளவிலான நிலங்களை கையகப்படுத்த அப்போது முடிந்தது.
தற்போது இந்த ஆலையை தனியார்மயமாக்கினால் மக்களிடையே குறிப்பாக ஆலையை அமைக்க நிலங்களை அளித்தவர்களிடையே அமைதியற்ற சூழல்நிலை உருவாகும். இன்று சேலம் உருக்காலை அமைந்துள்ள இடங்கள் மிகுந்த மதிப்புமிக்கவையாக மாறியுள்ளன. மேலும், சேலம் உருக்காலையானது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுடன், இந்த ஆலையால் சார்பு நிறுவனங்களும் பயன்பெற்று வருகின்றன.
ஆலை விரிவாக்கப் பணிகள்:சேலம் உருக்காலை விரிவாக்கப் பணிகள் ரூ.2,005 கோடியில் மேற்கொள்ள மதிப்பிடப்பட்டு, அதற்கு பல ஊக்களிப்பு நிதிகளுக்கான ஆதரவுகளை தமிழக அரசு அளித்துள்ளது. குறிப்பாக கடனுதவிகள், மூலதன மானியம், மின்சார வரி விலக்கு போன்ற பல சலுகைகளை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த விரிவாக்கப் பணிகளுக்கு மாநில அரசு மட்டுமின்றி மக்களிடம் இருந்து அதிக அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது.
ஆனால், சேலம் உருக்காலை தனியார்மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான செய்திகள், மாநில மக்களிடையே கண்டனத்தையும், விருப்பமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய பொருளாதார சூழ்நிலையில், பொதுத் துறை நிறுவனங்களுக்கு சரியான ஆதரவையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினால், அவை உரிய முறையில் செயல்படும் என்பது நமது நம்பிக்கையாகும்.
தற்போது சேலம் உருக்காலைக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளை நிச்சயம் ஆய்வு செய்து அந்த ஆலை திறம்பட இயங்குவதற்கு உரிய வாய்ப்புகளை அளித்திட வேண்டும். இந்த வாய்ப்புகளை அளித்தால் சேலம் உருக்காலை நிச்சயம் திறம்படச் செயல்பட்டு லாபம் ஈட்டும் நிறுவனமாக மீண்டும் மாறும்.
எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு மத்திய உருக்காலைத் துறைக்கும், இந்திய உருக்காலை நிறுவனத்துக்கும் உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.
மறு பரிசீலனை செய்ய வேண்டும்: சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டங்கள் ஏதேனும் இருந்தால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT