தமிழ்நாடு

இன்றைய அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி

DIN

இன்றைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அளித்த பேட்டி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். இதையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
இந்தியா வந்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியதோடு, பல்வேறு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது. ஆனால், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை. அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் என்ன? என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறியிருக்கிறது. போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வெளிப்படையான நீதி விசாரணை நடைபெற, வெளிநாட்டு நீதிபதி இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இலங்கை அரசு இதற்கு மறுத்து வருகிறது. இதுபோன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பில் பேசவில்லை என்றே தெரிகிறது.
தமிழர்கள் பிரச்னையில் இந்திய - இலங்கை அரசுகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அதுபோல, மீனவர் பிரச்னையைத் தீர்க்க கச்சத் தீவு உடன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும்.
தமிழகத்தில் கலூன்ற பாஜக முயற்சி: வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற தொழில் மேம்பாட்டுக்கு கொடுக்கின்ற முன்னுரிமை, விவசாயத்துக்குத் தருவதில்லை.
தமிழகம் மிகப் பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. கட்சிப் பிளவால் அரசு நிர்வாகம் செயல்படவில்லை. மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னைகளை அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதற்கிடையே, தமிழக அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக விரும்புகிறது.
தமிழக அரசியலில் நாங்கள் தலையிடவில்லை என பாஜகவினர் அடிக்கடி கூறுவதே, அவர்கள் தலையிடுகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது.
மக்கள் மேடை: பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜகவின் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு மக்கள் மேடை ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க உள்ளது.
இந்திய வெளிநாட்டு கொள்கையைப் பொருத்தவரை, அமெரிக்க நலன்களுக்கு நாம் நிர்பந்திக்கப்படுகிறோம். இது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சூழலுக்கு ஏற்ற ராஜதந்திர வகையிலான அமெரிக்க ஆதரவு என ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அது சரியல்ல என்றார் அவர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT