தமிழ்நாடு

காவலர்கள் கடமையாற்ற ஒத்துழையுங்கள்: மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

DIN

காவல் துறையினர் தங்களது கடமையை மேலும் சிறப்பாக ஆற்றும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வரின் காவலர் பதக்கங்களை 854 பேருக்கு வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியது:
தமிழகம் அமைதிப் பூங்காவாகவும், சிறந்த பாதுகாப்பான மாநிலமாகவும் விளங்கி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழகம் இத்தகைய உன்னத நிலையை அடைவதற்கு, இந்த நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு தமிழக காவல் துறையில் பணியாற்றும் அனைவரின் உழைப்பும் காரணமாக இருக்கிறது. சென்னை தியாகராய நகர், கொடுங்கையூர் ஆகிய இடங்களில் நடந்த தீ விபத்துகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் பணி பாராட்டத்தக்கது.
ஒத்துழைப்பு அளியுங்கள்: காவல் துறையினர் கடமையில் கண்ணாக இருந்து சட்டம் -ஒழுங்கை பாதுகாப்பதால்தான் மக்கள் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் நிம்மதியாக வாழ முடிகிறது.
சுதந்திரமாக தங்களுடைய அன்றாடப் பணிகளைச் செய்ய முடிகிறது. மக்கள்தான் இந்த நாட்டின் எஜமானர்கள். அவர்களுக்கு 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அந்த பாதுகாப்புதான் தமிழகத்தை இன்று பல துறைகளிலும் முன்னேற்றி இருக்கிறது.
காவல் துறைப் பணி மகத்தான பணி. சமுதாயத்தில், அநீதி இழைக்கப்பட்ட மக்கள் நியாயம் கோரி, காவல் நிலையங்களுக்கு வரும்போது, அவர்களை மனிதநேயத்துடன் அணுகி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும்போது மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதன் மூலம் சட்டத்தின் மீதும், அரசின் மீதும் மக்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்படுகிறது.
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினர், தங்களது கடமையை மேலும் சிறப்பாக ஆற்றும் வகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT