தமிழ்நாடு

பார்வையற்றவர்களோ 1.2 கோடி; கண் மருத்துவர்களோ வெறும் 20 ஆயிரம் தான்!: டாக்டர் அமர் அகர்வால்

DIN

நாட்டிலுள்ள 1.2 கோடி பார்வையற்றோருக்கு வெறும் 20 ஆயிரம் கண் மருத்துவர்களே உள்ளதாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அமர் அகர்வால் கூறினார்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் கண் மருத்துவ மாணவர்களுக்கான 'கல்பவிருக்ஷா - 2017' என்ற மருத்துவக் கல்வி நிகழ்ச்சி 3 நாள் கருத்தரங்கமாக வியாழக்கிழமை தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் அமர் அகர்வால் பேசியது:
கண் மருத்துவத்தின் நவீன தொழில்நுட்பங்களைக் கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 1.2 கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். அவற்றில் 55 சதவீதம் பேருக்கு கண்புரையின் காரணமாக பார்வையிழப்பு ஏற்படுகிறது. ஆனால், சிகிச்சையளிப்பதற்கு நாடு முழுவதும் 20 ஆயிரம் கண் மருத்துவர்களே உள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பேசியது:
உலகம் முழுவதும் 28.5 கோடி பேருக்கு பார்வைக் குறைபாடு உள்ளது. அவர்களில் 3.9 கோடி பேர் பார்வையற்றோர். மீதம் உள்ள 24.6 கோடி பேருக்கு பார்வைக்குறைபாடு என்பது சிறிய அளவு முதல் கடுமையானதாகவும் காணப்படுகிறது. உலகத்தில் பார்வையற்றோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் உள்ளனர். தேசிய பார்வைக் குறைபாடு கட்டுப்பாடு திட்ட அறிக்கையின்படி, 2015 மார்ச் முதல் 2016 மார்ச் மாதம் வரை 63.04 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 2020-ஆம் ஆண்டுக்குள் தடுக்கக்கூடிய பார்வையிழப்பை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கு அரசு மட்டுமல்ல, தனியார் மருத்துவமனைகளும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நம்ருதா சர்மா, அகில இந்திய கண் மருத்துவர் சங்கத்தின் நிர்வாகி டாக்டர் அரூப் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் மருத்துவப் படிப்பில் சிறந்த மாணவருக்கான விருதை, முதுநிலை மருத்துவ மாணவி கே. பூரணிக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் எஸ். கீதாலட்சுமி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT