தமிழ்நாடு

ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார்: தமிழருவி மணியன்

DIN

ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்றார் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன்.
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் அவர் மேலும், பேசியது:
நாட்டில் ஒவ்வொரு மக்களின் பார்வையும் ரஜினிகாந்த்தின் பக்கம் திரும்பும். அவர் தேர்தலில் வெற்றி பெற்று ஜார்ஜ் கோட்டையில் அமரும் காலம் வரும்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஊழல் மயமாக்கிவிட்டு, அரசியலை சீர்கெடுத்த, திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளையும் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது எனது சபதம். இதை இதுவரை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. காலம் எனக்கு கொடுத்துள்ள கடைசி கருணை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த வாய்ப்பை தமிழகம் தவறவிட்டால், இனி ஒருபோதும் வாய்ப்பே கிடைக்காது.
ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, சிஸ்டம் சரியில்லை எனக் கூறினார். அதே போல, ஊழலுக்கு எதிரான போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், என் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைத்தால் விலகி விடுங்கள் என்று கூறிய செய்திகள் என்னை அவரிடம் சேர்த்தன.
மூன்று கனவுகள்...: அவரை நான் சந்தித்த போது, ரஜினிகாந்த் தமிழக மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை கண்டு வியந்து போனேன். அரசியலுக்கு வருவீர்களா என்று நான் கேட்ட போது, நிச்சயமாக அரசியலுக்கு வருவது என முடிவெடுத்து விட்டேன். இது ஆண்டவன் எனக்கிட்ட கட்டளை என்றும், அரசியலில், நான் ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் தென்னக நதிகளை இணைத்து தமிழக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வெளிப்படையான ஆட்சியைத் தருவது என்பதே எனது 3 கனவுத் திட்டங்கள் என்றார். இதை செய்ய உள்ள அந்த மனிதர் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டுமா வேண்டாமா என்பதை பொதுமக்கள் முடிவு செய்ய வேண்டும்.
2007}ஆம் ஆண்டு தீவுத்திடலில் பிரதமர் மன்மோகன் சிங் இருந்த மேடையில், திமுக தலைவர் கருணாநிதி, இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அதுகுறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், அதை நிறைவேற்ற ஒரு மனிதன் புறப்பட்டுவிட்டார். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண விரும்பும் ரஜினிகாந்தை விவசாயிகள் தமிழக முதல்வராக்க வேண்டும்.
ஆன்மிகவாதி ரஜினி...: ரஜினிகாந்த் தமிழன் இல்லை என்ற விமர்சனம் கூறப்படுகிறது. தமிழகத்தை தமிழரல்லாத தெலுங்கர்கள் பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா போன்றோர் முதல்வராக திறம்பட ஆட்சி நடத்தியுள்ளனர். ஆனால், நடிகர் ரஜினி நாடாளக் கூடாது என்கின்றனர். அவர்களுக்கு நான் கூறுவது, கடந்த 1967}ஆம் ஆண்டு அண்ணா முதல் 2016 ஜெயலலிதா வரை திரையுலகினரே தமிழகத்தை ஆண்டுள்ளனர். ரஜினியை தமிழகம் நடிகராகப் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த சமூகத்தையும் நேசிக்கிற ஆன்மிகவாதியாக, மனிதநேயராகவே பார்க்கிறது.
ரஜினிக்குப் பின்னால் ரசிகர்களைத் தவிர யாருமில்லை...: ரஜினிக்கு ஜாதி, மதம் கிடையாது. மண்ணில் உள்ள அனைவரும் அவருக்கு உறவினர்கள். ரஜினிக்குப் பின்னால் ரசிகர்களைத் தவிர, பாஜக உள்ளிட்ட எந்த அமைப்பும் இல்லை. அவர்தான் மற்றவர்களை இயக்குவார். யாரும் அவரை இயக்க முடியாது.
ஜெயலலிதாவின் முகத்தைக் காட்டி ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவினர். அதிமுக 3 அணிகளில் உள்ளவர்களும் முகவரி அற்றவர்கள். தற்போது தேர்தல் வந்தால் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட யாரும் டெபாசிட் வாங்கமாட்டார்கள். இந்த ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். விரைவில் ரஜினிகாந்த் நிச்சயமாக அரசியல் களத்துக்கு வருவார். நாம் இதுவரை காமராஜர் ஆட்சியைப் பார்க்கவில்லை. அது ரஜினிகாந்த் வழங்கும் ஆட்சியாக இருக்கும்.
ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தியால் திமுகவின் கனவுகள் கலைந்துவிட்டன. திமுகவின் கனவை கலைக்க ரஜினி புறப்பட்டுவிட்டார். எனவே, காந்திய மக்கள் இயக்கத்தின் பின்னணியில், ரஜினிகாந்தை முதல்வராக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார் தமிழருவி மணியன். முன்னதாக, மாநாட்டிற்கு மாநில பொதுச்செயலாளர் ஏ. கணேசன் தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் வி. சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT