தமிழ்நாடு

புதுச்சேரி சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள்

DIN

அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை கடிதம் அளித்த பிறகு, அனைவரும் வாகனத்தில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் புதுச்சேரி அருகே சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில் உள்ள விண்ட் ஃபிளவர் என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 19 எம்.எல்.ஏ.-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவரை மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து கடிதம் கொடுத்தனர்.
மேலும், அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தனர். ஆளுநருடனான இந்தச் சந்திப்பு சுமார் 10 நிமிஷங்கள் வரை நடைபெற்றது.
சந்திக்காமல் புறப்பட்டனர்: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேரும் ஆளுநர் மாளிகையின் வேறு வாயில் வழியாக வெளியேறிச் சென்றனர். அவர்கள் அனைவரும் நேராக டிடிவி தினகரன் இல்லத்துக்குச் சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையை முடித்த அவர்கள் பிற்பகல் 1 மணியளவில் கார்கள் மூலமாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்று புதுச்சேரியை அடைந்தனர். அவர்கள் புதுச்சேரிக்கு அருகே உள்ள விண்ட்ஃபிளவர் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்காக ஹோட்டலில் உள்ள 20 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரில் வெற்றிவேல் தவிர அனைவரும் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி: இதுதொடர்பாக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக வந்துள்ளோம். ஆளுநரைச் சந்தித்து முதல்வரை மாற்றவேண்டும் என்று கோரி மனு கொடுத்தோம். புதுச்சேரிக்கு ஒரு நாள் ஓய்வு எடுப்பதற்காக வந்துள்ளோம். எங்களுடன் துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் வந்து தங்குவார். எதிரணியில் உள்ள எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும் என்றார் அவர். பாதுகாப்பு கருதி புதுச்சேரிக்கு வந்துள்ளதாக உடனிருந்த எம்எல்ஏ பார்த்திபன் தெரிவித்தார்.
ஆளுநர் அழைத்த பின்...: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை கோர ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடுவார் என டிடிவி தினகரன் தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடும் வரையில், தனியார் விடுதியிலேயே அவர்கள் தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், டிடிவி தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் விரைவில் திரும்பி வருவர் என்று அமைச்சர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிமுக அணிகள் இணைந்துள்ளதால் கட்சி வலுவுடன் திகழ்கிறது. எனவே, தினகரன் அணியில் இரு மனதுடன் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் விரைவில் அரசுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிப்பார்கள் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
எடப்பாடி கே.பழனிசாமிக்கு அளித்த வந்த ஆதரவை அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான திமுக, தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

சொகுசு விடுதியில் தங்குவதற்காக செவ்வாய்க்கிழமை வந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT