தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களுடன் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைந்த பிறகு ஏகப்பட்ட பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என 3 பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது. அதிலும், ஜெயலலிதா சகோதரர் மகள் தீபாவும் தன் பங்கிற்கு தனித்து அரசியல் செய்து வருகிறார்.
இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு சிறை சென்ற போது, அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரிந்து சென்றனர். அப்போது தமிழக சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் கட்டாயத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது.
எனவே ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு சட்டப்பேரவையில் அதிமுக தங்கள் பலத்தை நிரூபித்தது.
மறுபக்கம் சசிகலா குடும்பம் ஆட்சியிலும், கட்சியிலும் இருந்து முழுமையாக விலகும் வரை தர்மயுத்தம் தொடரும் என ஓபிஎஸ் தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புகளுக்கிடையே இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ் தரப்பு அறிவித்தது. இதையடுத்து இருதரப்பும் இணையும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. கடந்த திங்கட்கிழமை அன்று இருவரும் இணைந்தனர்.
ஓபிஎஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவில்லை என தமிழக ஆளுநரிடம் தெரிவித்தனர்.
தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுவை அடுத்துள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக இருக்கும்போது நன்றாகப் படித்த நாஞ்சில் சம்பத் ஏன் தமிழக முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கேள்வி எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.