நாமக்கல்: அரசிடம் இருந்து வர வேண்டிய சிறப்பு பொது நிதி இரண்டு ஆண்டுகளாக வராததால், ஊராட்சிகளில் அடிப்படை பணிகளுக்கு ஊராட்சி செயலர்கள் கடன் வாங்கி செலவு செய்து, பணத்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் கடும் நிதி நெருக்கடி:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தனி அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆனாலும், உள்ளாட்சிகளின் நிர்வாகம் முழுமையாகச் செயல்பட முடியவில்லை.
தமிழகத்தில் உள்ள 12,523 கிராம ஊராட்சிகளில் பணியாளர்களுக்கு ஊதியம், குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, சுகாதாரப் பணிகள், மின் கட்டணம் போன்ற குறிப்பிட்ட பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதி ஊராட்சி நிதி கணக்கு எண் 1-இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது.ஏற்கெனவே, பல மாவட்டங்களில் பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை நிறைவேற்றியதற்கு ஊராட்சி செயலர்கள் பில் தொகையை வாங்க அதிகாரிகளிடம் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடன் வாங்கும் ஊராட்சி செயலர்கள்
இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் கூறியது: ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. ஊராட்சிகளில் குடிநீர் குழாய் சரிபார்ப்பு, சாக்கடை அடைப்பு நீக்கம், குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கிய மற்றும் பராமரிப்புக்கான செலவுத் தொகையை அதிகாரிகளிடம் பெறுவதற்கு நாங்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
எங்களது சொந்தப் பணத்தைச் செலவிட்டாலும், அந்த தொகை உடனடியாக திரும்ப கிடைக்காததால், வேறு புதிய அடிப்படை வசதிக்கான பிரச்னைகளை சீர்செய்ய முடியவில்லை. ஏற்கெனவே பல மாதங்களாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பாக்கியுள்ள நிலையில், ஊராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமலும், நிறைவேற்றப்பட்டதற்கு உரிய தொகையை பெற முடியாமலும் தவித்து வருகிறோம்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்தும், பொதுமக்களின் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பொது நிதி: இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் கு.ராஜேந்திர பிரசாத் கூறியது: தமிழக அரசு மாநில நிதிக் குழு மானிய நிதியில் இருந்து ஊராட்சிகளின் பராமரிப்புச் செலவுக்கென ஒவ்வொரு மாதமும் நிதி வழங்குகிறது.
ஊராட்சியின் மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் இத் தொகை ஒவ்வொரு ஊராட்சிக்கும் வேறுபடும். இத் தொகை தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர், துப்புரவு ஊழியர்கள் ஊதியத்துக்குச் செலவிடப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக மாநிலக் குழு மானிய நிதியில் 35 சதவீதம் வரை குறைத்து தரப்படுகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகங்களில் கடும் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊராட்சித் தலைவர்களது பதவி காலம் முடிந்தது. இதன் பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர்கள் நிர்வாகத்தை நடத்துகின்றனர்.
கடந்த பல மாதங்களாக பராமரிப்பு மானியம் ஊராட்சிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் உள்பட பல பணிகளுக்கு கடன் சொல்லி பொருள்களை வாங்கி பணி செய்யும் நிலைக்கு ஊராட்சி செயலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊராட்சிகளுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேல் சிறப்பு பொது நிதி மானியம் வருவதில்லை. மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியையும் ஊராட்சிகளுக்கு வழங்கிய தெருவிளக்குகள், மின் கட்டணம், குப்பைத் தொட்டி வழங்கியது போன்ற செலவுகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்தில் பிடித்தம் செய்து கொள்கின்றனர்.
ஊராட்சிகளில் அடிப்படை பணிகளை நிறைவேற்ற ஊராட்சி செயலர்கள் கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஊராட்சி செயலர்களின் நிலையை உணர்ந்து முதல் கட்டமாக பெரிய ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம், சிறிய ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் நிதியை அரசு வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.