தமிழ்நாடு

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை அரசு கிடப்பில் போட்டது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

DIN

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு 'வாக்கி டாக்கி' வழங்கும் திட்டத்தை அரசு கிடப்பில் போட்டது ஏன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
'ஒக்கி' புயலில் காணாமல் போயிருக்கும் மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியத்துடன் செயல்படுவதாகக் கூறி திமுக சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து மு.க.ஸ்டாலின் பேசியது:
புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் உயிரோடு இருக்கின்றனர் என்ற கணக்கைக்கூட எடுக்க முடியாத ஓர் ஆட்சி தமிழகத்தில் உள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும் 14 நாள்களாக மக்களைச் சந்திக்காமலே இருந்தவர், திடீரென கன்னியாகுமரி சென்று வந்துள்ளார். ஒரு நாடகத்தை நடத்துவதற்காக அங்கே அவர் சென்றிருக்கிறார். அதிமுகவைச் சேர்ந்தவர்களையும் முக்கிய நிர்வாகிகளையும் மட்டும் மண்டபத்துக்கு அழைத்து பேசித் திரும்பி உள்ளார்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதற்காக 20 ஆயிரம் மீனவர்களுக்கு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு சாதனம் ( வாக்கி டாக்கி) வழங்க திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ரூ.57 கோடியில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.7.73 கோடி மதிப்பீட்டில் வாக்கி டாக்கி வாங்கப்பட்டு 2010 -இல் வழங்கப்பட்டது. 
ஆனால், அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்குவதை எல்காட் நிறுவனம் நிறைவேற்ற வேண்டியதில்லை எனக் கூறி, பல கோடி ரூபாய் கொடுத்து வாக்கி டாக்கி வாங்கியுள்ளனர். ஆனால், வாங்கியதற்குப் பிறகு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. முறையாக வாக்கி டாக்கியை மீனவர்களுக்கு கொடுத்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. 
எனவே, மீனவர்களைக் காப்பதற்கு இனியாவது மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மீனவர்களைத் திரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திமுக நடத்தும் என்றார் அவர். 
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, மீனவர் அணிச் செயலாளர் கே.பி.பி.சாமி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT