தமிழ்நாடு

துறைமுக முகத்துவாரம் தூர் வாருவதில் தாமதம்: 3 மாதங்களுக்கு தலா ரூ.30000 வீதம் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தினமணி

புதுச்சேரி மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் தூர் வாருவதில் ஏற்பட்ட தாமதத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தேசிய மீனவர் பேரவை அதன் தலைவர் மா.இளங்கோ வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மீன்பிடிதுறைமுக முகத்துவார நுழைவு வாயிலில் படகுகள் மீன்பிடிக்க துறைமுகத்திலிருந்து கடலுக்குள்ளேயும், கடலில் மீன்பிடித்த பின்னர் கடலில் இருந்து துறைமுகத்துள்ளேயும் வரும் பொழுதும் ஆண்டின் சில மாதங்களில் நீரோட்டம் காரணமாக முகத்துவாரத்தில் மண் குவிவது இயற்கையானது. 
அவ்வாறு மண் குவிந்து படகுகள் செல்ல முடியாத நிலை ஏற்படும் பொழுது மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, புதுச்சேரி அரசு உடனடி நடவடிக்கையாக முகத்துவார தூர் வாரும் பணியை நியமன உத்தரவு மூலம் காண்ட்ராக்டர்களை நியமித்து தூர் வாருவது வழக்கம்.

ஆனால், கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான நடைமுறைப்படி தூர் வாரப்படாமல் ட்ரட்ஜர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Dredger Corporation of India) என்ற மத்திய அரசின் கழகத்தின் மூலம் மண் வார ஏற்பாடு செய்வது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் எடுத்த தன்னிச்சையான முடிவால் கடந்த 5 மாதங்களாக தூர் வார முடியவில்லை.

வழக்கமான நடைமுறைப்படி தூர் வாரும் பணி துரிதமாக நடைபெற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், அரசு செயலர்கள், அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களை புறந்தள்ளி, துணை நிலை ஆளுநர் எடுத்த தன்னிச்சையான  முடிவால் கடந்த 5 மாதங்களாக முகத்துவாரம் மண் மூடப்பட்டு மீனவர்களின் படகுகள் கடலுக்கு செல்ல முடியவில்லை.

துறைமுகத்திலிருந்து கடலுக்கு செல்ல வேண்டிய 100 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் படகு உரிமையாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், அவர்களை நம்பி தொழில் செய்யும் சிறு, குறு மீன் வியாபாரிகள், முனிசிபல் மார்க்கெட் மீன் வியாபார பெண்கள், தலை சுமை மீன் வியாபார பெண்கள், ஏற்றுமதி மீன் வியாபாரிகள், மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனம் இயக்குபவர்கள், லாரிகள் மூலம் மீன் ஏற்றி செல்பவர்கள், ஐஸ் சப்ளை செய்பவர்கள் என்று ஏராளமான மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளது.

ஆளுநரின் பரிந்துரையோடு, பணியில் ஈடுபட்ட மண் வாரி கப்பல் காலம் கடந்து 4 மாதத்திற்கு பின்னர் டிசம்பரில் மண் வார துவங்கியது. ஆனால், இயந்திரம் சரியாக வேலை செய்யாமல் பழுதாகி விட்டது. 

பழுதை நீக்க ஜெர்மனியில் இருந்து வல்லுனர்களும், உதிரி பாகங்களும் வர வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மீனவர்கள் மற்றும் அதைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. கடந்த காலங்களில் தூர் வார முடியாமல் முகத்துவாரம் பாதிக்கப்பட்ட காலங்களில் படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம் உதவி தொகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, துணை நிலை ஆளுநரின் உத்தரவால் 3 மாதங்களாக மீனவர்கள் வருவாய் இன்றி தவித்து வருவதால் இப்போதய விலை உயர்வுக்கு ஏற்ப மாதம் ரூ. 30 ஆயிரம் வீதம், 3 மாதங்களுக்கான உதவி தொகையை மீனவர்களுக்கு வழங்க துணை நிலை ஆளுநர் உத்தர விட வேண்டும்.
முகத்துவாரத்தை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என்றார் இளங்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT