தமிழ்நாடு

25 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

DIN

இலங்கைச் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களையும், 119 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்று சிறை வைத்துள்ளனர்.
பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் அனுபவித்து வரும் வரலாற்று ரீதியான பாரம்பரிய உரிமைகளின் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தலையிட்டு வருகின்றனர். இலங்கையுடனான சர்வதேச எல்லைக் கோடு விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கச்சத்தீவு தொடர்பாக, 1974, 1976-ஆம் ஆண்டுகளில் இலங்கை-இந்தியா இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைத்துக் கொண்டுள்ளது.
படகுகளை விடுவிக்கவில்லை: 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட படகுகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை. ஒரே வாழ்வாதாரமாக உள்ள படகுகள் எடுத்துச் செல்லப்பட்டதால் அவர்கள் மிகுந்த விரக்தியான மனநிலைக்கு உள்ளாகியுள்ளனர். இப்போது இலங்கை வசம் தமிழகத்தைச் சேர்ந்த 119 படகுகள் நங்கூரமிடப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 2-இல் கொழும்புவில் நடைபெற்ற அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தில், படகுகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இப்போது பிடிக்கப்பட்ட 5 மீனவர்களுடன் 25 பேரையும், 119 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கையுடன் பேசி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தாமதமின்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: மீனவர்களின் நலனுக்காக சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,650 கோடியை ஒதுக்கீடு செய்து, தொடரும் செலவினமாக ரூ.10 கோடியை அனுமதிக்க வேண்டும் எனவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதை பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

SCROLL FOR NEXT