தமிழ்நாடு

"புற்றுநோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு'

DIN

நாட்டில் புற்றுநோய் காரணமாக 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணிக்கை குறைக்க விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு செயலாளர் முத்துராஜன் பேசினார்.

உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4-இல் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இ.எஸ்.ஒ.(உணவுக் குழாய், இரப்பை, உடல் பருமன்) என்ற அமைப்பு, இந்திய மருத்துவக் கழகம் ஆகியன சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மருத்துவ கல்லூரியின் அரங்கில் ஞாயிற்றுகிழமை நடந்தது.

இதில், "இரைப்பை, உணவுக் குழாய் புற்றுநோயைத் தவிர்க்க முடியும் - குணப்படுத்த முடியும், இதை உலகமறிய செய்வோம்' எனும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, முத்துராஜன் பேசியதாவது:-
நாட்டில் 2016-ஆம் ஆண்டின் கணக்கின்படி, புற்றுநோய் காரணமாக தற்போது 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் வருவதற்கு வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது.

புகையிலை, மதுவை உட்கொள்ளுதல், உடல் உழைப்பு குறைவு, விழிப்புணர்வு குறைவு ஆகியன மற்ற காரணங்களாக இருக்கின்றன. எனவே, புற்றுநோயில் இருந்து பாதுகாக்க முன்னதாகவே அறிந்து, சிகிச்சை எடுப்பது அவசியம். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், குடல், இரைப்பை அறுவைச்சிகிச்சை நிபுணர் சந்திரமோகன் பேசியது:-
உயிரிழப்பை ஏற்படுத்துவதில் இரைப்பை புற்றுநோய் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இரைப்பை புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.அதற்கடுத்து, சென்னையில் இதன் பாதிப்பு உள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, உப்பு அதிகமுள்ள உணவை(கருவாடு, ஊருகாய், வத்தல்) பயன்படுத்துவது ஆகியவை முக்கிய காரணமாக இருக்கிறது. சரியான உணவு எடுத்துகொள்ள வேண்டும்.

சோர்வு, வாந்தி எடுப்பது மாதிரி உணர்வு, அடிக்கடி வாந்தி எடுப்பது, உடல் எடை இழப்பு, மலப் பிரச்னை ஆகியன முக்கிய அறிகுறிகள். இந்தப் பிரச்னை இருந்தால், மருத்துவரை அணுகி, பரிசோதிக்க வேண்டும்.

இரைப்பை புற்றுநோய் பாதித்த 782 பேரிடம் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 4 மாதத்துக்கு பிறகுதான் மருத்துவரை சந்தித்துள்ளனர். எனவே அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, மருத்துவர்கள் கனகவேல், மதுசூதனன் ஆகியோர் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT