தமிழ்நாடு

வி.கே. சசிகலாவை பதவியேற்க அழைப்பதில் தாமதம் கூடாது: நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

DIN

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமைய அழைப்பு விடுக்கும் நடவடிக்கையில் மாநில ஆளுநர் தாமதம் செய்யக் கூடாது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.
ஒத்திவைப்பு நோட்டீஸ்: மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் காலையில் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல், மாநில ஆளுநர் தாமதித்து வருவது தொடர்பாக அவையை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இதேபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அகமது தில்லியில் உயிரிழந்தது தொடர்பான தகவலை தாமதித்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேரளத்தைச் சேர்ந்த அம்மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
இத்தகவலை மக்களவையில் தெரிவித்த சுமித்ரா மகாஜன், "மாநில ஆளுநர்' என்பது அரசியலமைப்பின் உயர் பதவி. அவருக்கு எதிரான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது. இதேபோல, மற்ற உறுப்பினர்கள் தரப்பில் அளித்த நோட்டீஸ்களையும் அனுமதிக்கவில்லை' என்றார்.
இதைத் தொடர்ந்து, சில நிமிடங்கள் மக்களவை மையப் பகுதிக்கு வந்து அதிமுக உறுப்பினர்கள் சிலரும் அவரவர் இருக்கையில் இருந்து எழுந்து நின்றவாறு சில உறுப்பினர்களும் சில நிமிடங்கள் குரல் எழுப்பினர். "ஜனநாயகத்தைக் காக்க வேண்டும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்' என்று அவர்கள் குரல் எழுப்பினர். நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய போதும் இதே கோரிக்கையை அவர்கள் எழுப்பினர். எனினும், அவர்களின் கோரிக்கை தொடர்பாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.
மாநிலங்களவையில் அமளி: மாநிலங்களவையில் இதே விவகாரத்தை அதிமுக உறுப்பினர்கள் அக்கட்சியின் குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அவையின் மையப் பகுதிக்கு வந்து எழுப்பினர். நண்பகல் 12 மணிக்கு முன்னதாக மாநிலங்களவை ஒரு முறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய போது அவர்கள் "ஜனநாயகத்தை காக்க வேண்டும். ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்' என்று குரல் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு பிறகு மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து நவநீதகிருஷ்ணன் பேசுகையில், "தமிழகத்தில் சசிகலா தலைமையில் புதிய அரசு அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால், அவருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் நடவடிக்கையை மாநில ஆளுநர் தாமதப்படுத்துகிறார்' என்றார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடைசி நாள் வியாழக்கிழமை என்பதால், கூட்டத்தொடர் முடிந்தவுடன் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அனந்த் குமார் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மக்களவைத் துணைத் தலைவர் என்ற முறையில் மு.தம்பிதுரையும் உடனிருந்தார். ஆனால், தம்பிதுரையும் பிரதமரும் இச்சந்திப்பின் போது எதுவும் பேசவில்லை.
ராஜ்நாத் கருத்து: இதற்கிடையே, தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதுபோன்ற நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் முடிவெடுக்கக் கூடிய அனைத்து அதிகாரங்களும் ஆளுநரிடம்தான் உள்ளது. எனவே, தற்போதைக்கு இதில் மத்திய அரசு தலையிடுவதற்கான அவசியமே எழவில்லை' என்றார்.
தில்லியில் எம்.பி.க்கள் முகாம்
தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்.பி.க்கள் தில்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
சசிகலா தலைமையில் புதிய அரசு அமைக்க அனுமதிக்குமாறு ஆளுநருக்கு அறிவுரை வழங்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் புதன்கிழமை இரவு தில்லிக்கு வந்தனர். இந்நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வியாழக்கிழமை பிற்பகலில் வருவதாக அதிமுக எம்.பி.க்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடியரசுத் தலைவரை சந்திக்கும் திட்டத்தை அதிமுக எம்.பி.க்கள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், மாநில ஆளுநரை அதிமுக பொதுச் செயலரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவருமான சசிகலா சந்தித்த பிறகு சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்கான முயற்சியைத் தொடர அதிமுக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT