தமிழ்நாடு

மலையக்கோயிலில் ஜல்லிக்கட்டு: எஸ்.ஐ. உள்பட 28 பேர் காயம்

DIN

புதுக்கோட்டை அருகே மலையக்கோயிலில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்பட 28 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இதில், நற்சாந்துபட்டி அருகேயுள்ள மலையக்கோவில் கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 111 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டு தளத்தில் மாடு பிடிக்க பதிவு செய்த 91 வீரர்கள் தயாராக இருந்தனர். பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கி 3.30 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில் வாடிவாசலிலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்க முயன்ற வீரர்களில் 27 பேரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரும் காயமடைந்தனர்.
இவர்களில், ஜல்லிக்கட்டுத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்க இயலாத வகையில், பலத்த காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பிலிப்சேவியர் (45), பிச்சைமுத்து (29), ரமேஷ் (25), சரவணன் (28), கருப்பையா (27) உள்ளிட்ட 7 பேர், தீவிர சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத வகையில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர். சு. கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி, வருவாய்த் துறை, கால்நடைத் துறை, மருத்துவத் துறை அலுவலர்கள், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT