தமிழ்நாடு

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பழனிசாமி

DIN

தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.
இதற்காக ஆளுநரை அவரது மாளிகையில் 10 அமைச்சர்களுடன் அவர் சந்தித்தார். மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சுமார் 10 நிமிஷங்கள் வரை நீடித்தது. இந்தச் சந்திப்பின் போது, பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயகுமார், பி.தங்கமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், சரோஜா, ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கூவத்தூரில் முடிவு: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கியிருந்த வி.கே.சசிகலா ஆலோசனை நடத்தினார்.
சில மணி நேரங்கள் வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமியைத் தேர்வு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஆளுநர் சந்திக்க அவரது தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கினார்.
இதன்பின், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் சென்று எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எடப்பாடி தலைமையில் சென்ற அமைச்சர்கள் குழுவிடம் 5 நிமிஷங்கள் வரை மட்டுமே ஆளுநர் பேசியதாகத் தெரிகிறது. கடிதங்களைப் பார்த்து படித்து விட்டு பின்னர் அழைப்பதாக ஆளுநர் கூறியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
கூவத்தூரில் தங்குதல்: ஆளுநரைச் சந்தித்த பிறகு எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்குச் சென்றனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கேயே தங்கியிருப்பர் என்று தெரிகிறது.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து அவரை சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்ய ஆளுநர் உத்தரவிட வாய்ப்புகள் இருக்கின்றன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி பல்வேறு புகார்களை ஆளுநரிடம் தெரிவித்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT