தமிழ்நாடு

கசப்பை மறப்போம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

DIN

கசப்பை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்திருந்தபோது, அவரது ஆன்மா உத்தரவிட்டதால் மனதில் அடக்கி வைத்திருந்த சில உண்மைகளை தெரிவித்தேன். இதற்கு கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும், அதிமுகவின் ஒன்றரைக் கோடி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இடையூறை நீக்க வேண்டும்: எதிர்பாராத வகையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் கடந்த சில நாள்களாக ஜெயலலிதாவின் ஆட்சி மீதமுள்ள ஆண்டுகளுக்குத் தொடர்வதில் தாற்காலிக இடையூறு மட்டுமே ஏற்பட்டுள்ளது.
எனவே, அதிமுக எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருந்து, கட்சிக்கு எந்தவித ஊறும் ஏற்படாமல் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தேவையானவற்றை மனசாட்சிபடி உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதுவே மானசீகமாக ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.
அவரது பல்வேறு நலத் திட்டங்களால் அதிமுக ஆட்சியை மக்கள் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்து நல்லாட்சி வழங்கும் வாய்ப்பை அளித்தார்கள். காலத்தின் சதியினால் ஜெயலலிதா நம்மிடையே இருந்து தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டர்களின் விருப்பத்துக்கேற்ப..: இந்த நிலையில் அதிமுக வெற்றிக்காக அல்லும், பகலும் கண் அயராது உழைத்தவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் வழியிலேயே செல்வதுதான் எம்எல்ஏக்களின் கடமையாகும். இதுவே தமிழகத்துக்கும் நலம் சேர்க்கும்.
எனவே, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தால், அதிமுகவின் ஒற்றுமைக்கும், ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்வதற்கும், தமிழகத்தின் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.
எதிரிக்கு இடமளிக்காதீர்: எதிரிகள் அதிமுக பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கு இடமளிக்கக் கூடாது. வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதா எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ, அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை ஒற்றுமையுடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அழைக்கிறேன்.
தாற்காலிகமாக ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரும் எப்போதும்போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எந்தவித தயக்கமும் இருக்காது என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கருத்து
மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடு இருக்கிறது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக உறுதியாகியுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை கூடியிருந்த தொண்டர்களிடையே அவர் பேசியது:-
ஜெயலலிதாவின் நல்லாட்சிதான் தொடரும். அவரின் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் அரசு உறுதியாகச் செயல்படுத்தும்.
இந்த நேரத்தில், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது மிகப் பெரிய கடமையாகும். இந்தச் சூழலில் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.
எந்தவித இடையூறும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் அதிமுகவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு வார காலமாக ஆதரவு அளித்து வந்தோருக்கு நன்றி.
மாற்றுக் கட்சி, எதிர்க்கட்சி என்று யாருடைய ஆதரவும் இல்லாமல் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும். ஏனென்றால் தொடர்ந்து 2-ஆம் முறையாக ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடு இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உறுதியாகி இருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT