தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: கொண்டாடிய அதிமுகவினர், அமைதி காத்த திமுகவினர்

DIN

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலாவுக்கு தண்டனை குறித்த தகவல் வெளியானவுடன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதேநேரத்தில் வழக்கு தொடர்ந்த திமுக சார்பில் பெரிய அளவில் கொண்டாட்டம் இல்லை.
தீர்ப்பு அளிக்கப்பட்ட நேரத்தில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளை ஏராளமானோர் பார்த்தனர். தீர்ப்பையறிந்து பன்னீர்செல்வத்தை ஆதரித்தும், சசிகலாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். பெண்கள் நடனமாடினர். இனிப்புகளும் வழங்கப்பட்டன.
ஜெயலலிதாவின் ஆன்மா உயிருடன் உள்ளது- பன்னீர்செல்வம்: இதையடுத்து, வீட்டுக்கு வெளியில் வந்த ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களைப் பார்த்து, "ஜெயலலிதாவின் ஆன்மா உயிருடன் இருக்கிறது என்பது உச்சநீதிமன்றத்தின் மூலம் உறுதியாகியுள்ளது' என்றார். இதையடுத்து, தொண்டர்கள் சிலர் கண் கலங்கிய சம்பவமும் நடைபெற்றது.
படம் மாறுகிறது: தங்களது சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருந்த அதிமுகவினர் பலர், பன்னீர்செல்வம் படத்தை வைக்கத் தொடங்கினர். அவரது வீட்டின் முன் ரூ.10-க்கு விற்கப்பட்ட படத்தில், பன்னீர்செல்வம் படம் பிரதானமாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் சிறிய அளவில் இருந்தன.
தீபா வீட்டில் கொண்டாட்டம்: தியாகராய நகரில் உள்ள தீபா இல்லம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
திமுகவில் கொண்டாட்டம் இல்லை: இந்த நிலையில், தீர்ப்பை வரவேற்றதுடன் திமுகவின் தலைவர்கள் நிறுத்திக் கொண்டனர். அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் கொண்டாட்டம் இல்லை.
அசம்பாவிதங்கள் இல்லை!
தமிழகத்தில் பெரியளவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
தீர்ப்பையொட்டி, திங்கள்கிழமை இரவு முதலே சுமார் 1.12 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு ரோந்துப் பணிகளும், சோதனைகளும் நடைபெற்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீடுகள், அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்கள் வீடுகள் ஆகியவற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
பதற்றமான பகுதிகளில் ஆயுதப்படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் நிறுத்தப்பட்டனர். ஆனால், எந்தவொரு இடத்திலும் போராட்டமோ, வன்முறைச் சம்பவமோ நடைபெறவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-இல் தீர்ப்பு வெளியானபோது, தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று மக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு பல நாள்கள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள விரைவு அதிரடிப் படை போலீஸார்.
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு குவிக்கப்பட்டுள்ள விரைவு அதிரடிப் படை போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT