தமிழ்நாடு

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கைது

DIN

தமிழக மக்களின் உணர்வுகளுக்கேற்ப அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை செயல்பட வலியுறுத்தி, மதுரை, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய நகரங்களில் தடையை மீறி மக்கள் சந்திப்பு பேரணிகளை நடத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் 620 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது பதவியை ராஜினாமா செய்தததை அடுத்து, அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்த உள்ளார்.
இதற்கிடையே, பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை அனைத்து தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பேரணி நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.
விழுப்புரத்தில்...: விழுப்புரம் நகராட்சித் திடலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் சரவணன் தலைமை வகித்தார். தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அதிமுக இலக்கிய அணிச் செயலர் திருப்பதி பாலாஜி, மகளிரணி சுமதி, செல்வி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மணவாளன், ராஜ்குமார், அன்பு, முருகன், பாரதிராஜா, நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 25 பெண்கள் உள்ளிட்ட 75 பேரை, விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
மதுரையில்...: மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகராட்சி மண்டல முன்னாள் தலைவர் பெ. சாலைமுத்து தலைமையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 30 பேர் பேரணி செல்ல முயன்றனர். சுப்பிரமணியபுரம் போலீஸார் அவர்களைத் தடுத்து, கைது செய்தனர்.
நாகையில்...: நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் ஜெ. தீபா பேரவை ஆதரவாளர்களான நடேச. ஜெயராமன், என்.பி. பாஸ்கரன், ஓபிஎஸ் ஆதரவாளர் தரப்பில் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் யாரும் கைது செய்யப்படவில்லை.
எனினும், மயிலாடுதுறையில் 120 பேர், செம்பனார்கோயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 150 பேர் சீர்காழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 145 பேர், வேதாரண்யத்தில் 100 பேர் என 515 பேரை வேதாரண்யம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT