தமிழ்நாடு

பிரதமர் மோடி நாளை கோவை வருகை: காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, ஈஷா யோக மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக காவல்துறை உயரதிகாரிகள் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி - சிவன் சிலை திறப்பு விழா, மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் இருந்து பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.25 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
இதன் பிறகு, விழா நடைபெறும் ஈஷா யோக மையத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் விழாவில் ஆதியோகியின் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். இதன் பிறகு, இரவு 7.55 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் வரும் அவர் இரவு 9 மணி அளவில் புது தில்லி செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர், பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். பிரதமர் வரும் நேரத்தில் வானிலை மோசமடைந்தால், கார் மூலமாக விழா நடைபெறும் இடத்துக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
பிரதமர் வருகையை ஒட்டி, கோவை புறநகர்ப் பகுதிகளான பேரூர், ஆலாந்துறை, செம்மேடு, பூண்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழக காவல்துறை (சட்டம்-ஒழுங்கு) ஏடிஜிபி ஜே.கே.திரிபாடி, உளவுத் துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. சுரேஷ்குமார் ஆகியோர் கோவைக்கு புதன்கிழமை வந்தனர். பின்னர், விழா நடைபெறும் ஈஷா யோக மையத்துக்குச் சென்ற அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT