தமிழ்நாடு

பேரவை நிகழ்வுகளின் விடியோ ஆதாரங்களை ஸ்டாலின் தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

நம்பிக்கை வாக்கெடுப்பு நாளன்று, சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளின் விடியோ ஆதாரங்கள் இருந்தால் தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொது நல மனுத்தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்குமாறு மு.க.ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் கடந்த இரண்டு நாள்களாக, வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், இந்த மனுவை, பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, திமுக ஏன் இந்த வழக்கைத் தொடர்ந்தது என்று ஆச்சரியமாக கேட்ட நீதிபதிகள், பிரச்னை முதல்வருக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குமானது என்றனர்.
அதைத் தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், "மனுதாரர் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் கூட, சட்டப்பேரவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வரும்போது, அவர் போர் நினைவுச்சின்னம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆகையால், அங்கிருந்து அவர் பேரவைக்கு அவர் நடந்தே வர வேண்டியிருந்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரியதற்காக, மனுதாரர்(ஸ்டாலின்) உள்பட அனைத்து திமுக உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக அவையில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றினர் என்றார்.
அதைத் தொடர்ந்து, சமூக நீதிக்கான வழக்குரைஞர்கள் பேரவை (இதே போன்ற நிவாரணம் கோரிய மனு) சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.எல்.ராஜா, காவலர்கள் பாதுகாப்புடன் அதிமுக உறுப்பினர்கள் பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதுவே, சட்ட விரோதமாக அவர்களை அடைத்து வைக்கப்பட்டிருந்ததை எடுத்துரைக்கிறது. மேலும் உறுப்பினர்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் விடியோ ஆதாரம் உள்ளதா என்று மனுதாரர்களை கேட்டனர். இதற்கு பதிலளித்த மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு மட்டுமே சட்டப்பேரவை நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த விடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பேரவை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், விடியோ ஆதாரம் இருந்தால், அவற்றை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் எனக் கூறி மனு மீதான விசாரணையை பிப்ரவரி 27-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT