தமிழ்நாடு

தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து விட்டது: ராமதாஸ் குற்றச்சாட்டு

தினமணி

தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை நிகழ்வுகளைப் பார்க்கும்போது சட்டம் &ஒழுங்கு நிலைமை குறித்த கவலை ஏற்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலியில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த கைதி கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது இக்கவலையை அதிகரித்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமான சிங்காரம் என்ற கைதியை, அவர் மீதான குற்ற வழக்கு ஒன்றில் நேர்நிறுத்துவதற்காக பாளையங்கோட்டை சிறையிலிருந்து நேற்று காலை காவல்துறை வாகனத்தில் காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறையிலிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே, மூன்று மகிழுந்துகளில் வந்த கும்பல், காவல்துறை வாகனத்தின் மீது தங்கள் வாகனத்தை மோதி தடுமாற வைத்திருக்கிறது. காவல்துறை ஊர்தியில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி மற்றும் தண்ணீரை வீசி நிலைகுலையச் செய்ததுடன், கைதி சிங்காரத்தை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. முன்பகை காரணமாகவே இந்த கொலை நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற யூகத்திற்கு வந்திருப்பதைத் தவிர இதில் வேறு எந்த முன்னேற்றமும் இன்று வரை ஏற்படவில்லை.

கைதி சிங்காரத்தை காவல்துறையினர் எந்த நேரத்திற்கு கொண்டு செல்வர் என்பதை கண்காணித்து இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கிறது.  கைதி சிங்காரம் மீது ஏராளமான கொலை வழக்குகளும், வேறு வழக்குகளும் இருந்திருக்கின்றன. நேற்று முன்நாள் பாளை சிறையிலிருந்து தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிங்காரம், நேற்று இரண்டாவது முறையாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை கொலை செய்வதற்காக 3 வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். சிங்காரம் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால் அவருக்கு எதிராக இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை காவல்துறை எதிர்பார்த்து, அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய காவல்துறை தவறி விட்டது. அதுமட்டுமின்றி, சிங்காரத்தை படுகொலை செய்யும் திட்டம் பெரிய அளவில் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை ஒரே நாளில் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க முடியாது. இதை உளவுத்துறையினர் முன்கூட்டியே கண்டுபிடித்து தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

கடந்த 12-ஆம் தேதி திருவண்ணாமலையில் அதிமுகவின் முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் என்பவரும், வேலூர் காட்பாடியில் அதிமுக நிர்வாகியும், தனியார் கல்லூரி அதிபருமான ரவி என்பவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதில் முதல் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைந்து விட்ட நிலையில், இரண்டாவது கொலையில் குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப் படவில்லை. காவல்துறையின் செயல்பாடுகள் இந்த அளவுக்கு தான் கவலையளிக்கும் வகையில் உள்ளன.

ஒரு மாநிலத்தில் திட்டமிடப்பட்ட படுகொலைகள் நடக்காமல் தடுப்பதில் உளவுத்துறையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை உளவுத்துறை செயலிழந்து விட்டது. உளவுத்துறைக்கு தலைமை கூட இல்லை. தமிழக உளவுத்துறையின் தலைமை இயக்குனராக டி.கே. இராஜேந்திரன் இருக்கும் போதிலும், அவர் சட்டம் & ஒழுங்கையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், உளவுத்துறையின் தலைவர்(ஐ.ஜி) பொறுப்பில் இருப்பவர்கள் தான் அதை முழுமையாக வழி நடத்துவார்கள். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் உளவுத்துறை தலைவர்கள் ஆறு முறை இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் அப்பதவியில் நியமிக்கப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் 2015-ஆம் ஆண்டு நீக்கப்பட்டு, அவருக்கு பதில் சத்தியமூர்த்தி நியமிக்கப் பட்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் நீக்கப்பட்டு, கரண்சின்ஹா அப்பதவியில் அமர்த்தப் பட்டார். தேர்தலுக்கு பிறகு மீண்டும் சத்தியமூர்த்தி அப்பதவிக்கு வந்தார். அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக அவர் நீக்கப்பட்டு டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் நியமிக்கப் பட்டார். ஆனால், 10 நாட்களில் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். முக்கியமான பதவியில்  உள்ள அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டதும் உளவுத்துறையின் முடக்கத்துக்கு காரணம் ஆகும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான தேவைகளில் முக்கியமானது சட்டம் & ஒழுங்கு ஆகும். எனவே, காவல்துறையை சீரமைத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT