தமிழ்நாடு

மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது: முதல்வர் பழனிசாமி

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை, குடிநீர், மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களை ரூ.5,912 கோடியில் செயல்படுத்த மத்திய நீர்வள ஆணையம், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வை குழு- மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை ஆகியவற்றின் அனுமதியையும் கர்நாடக அரசு பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறது.
நிலுவையில் வழக்குகள் உள்ள நிலையில்..: காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம், கேரள மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்தின் சார்பிலும் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை உத்தரவு கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஒருதலைப்பட்சமாக முடிவு: இந்த நிலையில், மத்திய நீர் வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 8-இல் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், "மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு செயல்படுத்துவதற்கு முன்பு, அண்டை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தார்.
மேலும், உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்காமல் காவிரி ஆற்றில் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்த மாட்டோம் என்று அளித்த உறுதிமொழியை மீறி கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது என்பது கர்நாடக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும். இது தமிழக மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும்.
அனுமதி தராதீர்: எனவே, மேக்கேதாட்டு உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் கர்நாடக அரசுக்கு மத்திய நீர் வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளிக்கக் கூடாது.
இந்தத் திட்டம் சார்ந்த மின்சாரம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளும் கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
இந்தப் பிரச்னையில் தமிழகத்துக்குச் சாதகமான நடவடிக்கையை பிரதமர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT