தமிழ்நாடு

உமறுப் புலவருக்கு ஏன் இல்லை அரசு விழா?

இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்து விளங்கும் சீறாப்புராணத்தை இயற்றி தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சிறப்பு சேர்த்த உமறுப்புலவருக்கு, எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரச

எஸ். சங்கரேஸ்வரமூர்த்தி

இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்து விளங்கும் சீறாப்புராணத்தை இயற்றி தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சிறப்பு சேர்த்த உமறுப்புலவருக்கு, எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு விழா நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நாட்டுக்காக, மொழிக்காக தொண்டாற்றிய தலைவர்கள் மற்றும் சான்றோர்களைக் கெளரவிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை, தன்னலமற்ற தொண்டுகளை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதத்திலும் அவர்களுக்கு நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், மணிமண்டபங்களை தமிழக அரசு உருவாக்கி பராமரித்து, அரசு விழாக்களை நடத்தி பெருமை சேர்த்து வருகிறது. அந்த வகையில், உமறுப்புலவரின் அருந்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பெயரில் தமிழ் அறிஞர்களுக்கு சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நாளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.1 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்தபடி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், உமறுப்புலவரின் தமிழ்த் தொண்டை பெருமைப்படுத்தும் வகையில் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு விழா நடத்தப்பட வேண்டுமெனவும், விழாவில் சீறாப்புராணம் உள்பட அவரது படைப்புகள் குறித்து உரை அரங்கம், கவியரங்கம், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டுமெனவும் தமிழ் அறிஞர்கள், இஸ்லாமிய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து எட்டயபுரம் உமறுப்புலவர் சங்கத் தலைவர் உமர் ராவுத்தர் காஜா மைதீன் கூறியது:
சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வாழ்க்கை வரலாறு என்று பொருள். முகம்மது நபியின் பிறப்பு, இளமை, திருமணம், ஆற்றல், வெற்றி ஆகிய வரலாற்றைக் கூறுவதால் இந்நூல்
சீறாப்புராணம் எனப் பெயர் பெற்றது. கருத்துச் செறிவும், சொல் இனிமையும் உடைய இக் காப்பியம் விலாதத்து காண்டம் (24 படலம்), நுபுவ்வத்து காண்டம் (21 படலம்), ஹிஜ்ரத்து காண்டம் (47 படலம்) என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. விலாதத்து, நுபுவ்வா, ஹிஜ்ரா ஆகிய அரபுச் சொற்களுக்கு முறையே பிறப்பு, தீர்க்க தரிசனம், இடம் பெயர்தல் என்பன பொருளாகும். இந்நூலில் மொத்தம் 92 படலங்களும், 5,027 பாடல்களும் அமைந்துள்ளன. காப்பிய மரபின்படி தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் பண்பாட்டையும் சீறாப்புராணத்தில் எங்கும் காணலாம்.
இத்தகைய பெருமை வாய்ந்த உமறுப்புலவருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் மீலாது நபி தினத்துக்கு அடுத்த நாள் அரசு தரப்பில் விழா எடுக்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வேண்டுகோளாகும் என்றார்.
வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் உமறுப்புலவர். இவரது காலம் 17ஆம் நூற்றாண்டாகும். எட்டயபுரம் மன்னர் ஸ்ரீவெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்து புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றவர். தம் ஆசானுக்கு பின் எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராக பொறுப்பேற்றவர்.
இஸ்லாம், தமிழ் ஆகிய இரண்டு பண்பாடுகளும் தனித்தன்மையுடன் வளர்ந்தோங்க வேண்டும் என்ற நோக்கில், இலக்கிய மரபுகளிலிருந்து வழுவாமல் முகம்மது நபியின் வாழ்வியல் சிந்தனை கோட்பாடுகளை சீறாப்புராணம் எனப் படைத்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர் உமறுப்புலவர். மொழிக்கு மட்டுமல்லாது வாழும் நெறிக்கும் இலக்கண நெறி வழுவாது காப்பியம் படைத்தவர்.
உமறுப்புலவர் கி.பி.1703 (ஹிஜிரி 1115) ஆம் ஆண்டில் எட்டயபுரத்தில் காலமானார். எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசின் சார்பில் ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் 2007ஆம் ஆண்டில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அவரது தமிழ்த் தொண்டையும், மாண்பையும் நாட்டு மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூரத்தக்க வகையில், அவரது பிறந்த தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மீலாது நபி தினத்துக்கு அடுத்த நாள் அரசு விழா கொண்டாடப்பட வேண்டும். அவ் விழாவில் தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டாற்றிய இஸ்லாமிய தமிழ் அறிஞர்களை, தமிழ் எழுத்தாளர்களை கெளரவிக்க வேண்டும்.
மணிமண்டப வளாகத்தில் நூலகம் ஏற்படுத்தி உமறுப்புலவரின் படைப்புகள் உள்ளிட்ட ஏனைய தமிழ் அறிஞர்களின் படைப்புகளை இடம்பெறச் செய்ய வேண்டும். உமறுப் புலவரின் மணிமண்டபத்துக்கு காப்பாளரை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT