தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு அச்சாரமாக விளங்கும் மாயனூர் கதவணை. 
தமிழ்நாடு

காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் விரைவுப்படுத்தப்படுமா?

பல நூறு ஆண்டுகளாக காவிரி மூலம் கிடைத்த தண்ணீர் கொண்டு நெல், வாழை, கரும்பு, வெற்றிலை என எண்ணற்ற பயிர்களை விளைவித்த தமிழன், இன்று கர்நாடகம் எப்போது தண்ணீர் தரும், வருண பகவான் கை கொடுப்பானா என்ற ஏக்கத்தில் வாழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஏ. அருள்ராஜ்

பல நூறு ஆண்டுகளாக காவிரி மூலம் கிடைத்த தண்ணீர் கொண்டு நெல், வாழை, கரும்பு, வெற்றிலை என எண்ணற்ற பயிர்களை விளைவித்த தமிழன், இன்று கர்நாடகம் எப்போது தண்ணீர் தரும், வருண பகவான் கை கொடுப்பானா என்ற ஏக்கத்தில் வாழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி, தமிழக விவசாயிகள் நாமம் போட்டுப் போராட்டம், பாடை கட்டும் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தியும், கர்நாடகத்துக்கே குடிக்க தண்ணீர் இல்லை என்றும், முதல்போக விவசாயத்துக்கே நீர் இல்லை என கர்நாடகம் கூறி வருகிறது. தமிழகத்துக்குரிய நீர் கிடைக்காததால் கடந்த ஆண்டும், நிகழாண்டும் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி நடைபெறவில்லை.
சங்க காலம் முதல் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆளுகைக்கு வரும் வரை கர்நாடகாவின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி தண்ணீருக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் தான் 1932-ல் கர்நாடக மாநிலம், மாண்டியாவில் கிருஷ்ணராஜ சாகரும், 1934-ல் தமிழகத்தில் மேட்டூரில் ஸ்டான்லி நீர்த்தேக்கம்(மேட்டூர் அணை)கட்டப்பட்டது.
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப வற்றாத ஜீவ நதியாக ஓடிய காவிரியைத் தடுத்து அணைகள் பல கட்டப்பட்டாலும், மழைக் காலங்களில் கர்நாடக அணைகளில் நிரம்பி வழியும் உபரிநீர் கிடைத்தால் மட்டுமே, தமிழகத்தில் விவசாயம் என்ற நிலைதான் இன்னமும் உள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் உபரிநீர் தமிழகத்தை வந்தடையும்போது அதனை சேமிக்கும் கலனாக மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. அந்த அணையும் நிரம்பி வழியும்போது உபரிநீராக ஆண்டுக்கு 5.40 டிஎம்சி தண்ணீர் வீணாக வங்கக்கடலில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீர் வீணாகுவதை தடுக்கும் வகையில்தான், காவிரியில் இருந்து தென்னக நதிகளை இணைக்கும் வகையில் 2008-ல் காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை கொண்டு வந்தது.
இதன் முதற்கட்டமாக காவிரியில் அகண்ட காவிரி என்றழைக்கப்படும் கரூர் மாவட்டத்தின் மாயனூர் என்ற இடத்தில் ரூ.234 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே 1.04 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டது. 2008-ல் அணையைக் கட்டும் முயற்சியில் அப்போதைய திமுக அரசு தொடங்கினாலும் அரசியல் பாகுபாடின்றி இறுதியில் அதிமுக அரசு கட்டி முடித்து இறுதி வடிவம் கொடுத்தது. இந்த அணை கட்டியதன் விளைவு இன்றும் அணையை சுற்றி சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
ஆற்றின் குறுக்கே கதவணையைக் கட்டிய பின்னர் அதில் இருந்து தேக்கி வைக்கப்படும் நீரை அணையில் இருந்து வாய்க்கால் வெட்டி அவற்றின் மூலம் பட்டுக்கோட்டை அக்கினியாறு, புதுகை தெற்கு வெள்ளாறு, காரைக்குடி தேவகோட்டையில் உள்ள மணிமுத்தாறு நதியுடன் இணைக்கப்பட்டு பின்னர், அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர்,கடலாடி,சாயல்குடியில் உள்ள குண்டாறு வரையும் நதிகள் இணைக்கும் வகையில் 2 ஆம் செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நதிகள் இணைப்புத் திட்டத்துக்காகத் தான் முதற்கட்டமாக மாயனூரில் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது கரூர், திருச்சி, புதுகை,சிவகங்கை,ராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்களில் உள்ள குளங்கள்,ஏரிகள் நிரம்பி சுமார் 3.37 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்தகைய நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, நீர்நிலைகள் நிரம்பி அந்தந்தப் பகுதிகளில் சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு நீர்மட்டமும் உயரும். விவசாயத்துக்கோ,குடிநீருக்கோ பஞ்சம் ஏற்படாது. கிராமங்களில் விவசாயத் தொழில் மேம்படும், காய்கறிகள், கனிகளின் விலையேற்றம் இருக்காது.
இந்த திட்டத்தை செயல்படுத்த மிகவும் கடினம் எனக் கருதினாலும், பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம், முல்லைப் பெரியாறு அணை போன்றவை உருவாக்கப்பட்டதோ அதேபோல இந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து நிறைவேற்ற வேண்டும்.
ஆட்சியாளர்கள் நகர விரிவாக்தத்திட்டம், நகர் குடியிருப்புகள் விரிவாக்கம் திட்டம் போன்றவைக்கெல்லாம் அதிக நிதி ஒதுக்கும் நிலையில், இதுபோன்ற எதிர்கால சமுதாயத்துக்கு நல்வழியை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டங்களை அரசியல் பாகுபாடில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
இதுதொடர்பாக காவிரி பாசன விவசாயிகள் நலப்பாதுகாப்பு சங்கச் செயல் தலைவர் மகாதானபுரம் வி.ராஜாராம் கூறுகையில், தென் மாவட்டங்கள் வளம்பெற காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம். சுமார் 250 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது, கரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. கர்நாடகாவிடம் கையேந்தும் நிலையும் வராது. இந்தத் திட்டத்தை கிடப்பில் போடாமல் விரைவில் செயல் வடிவம் கொடுத்தால் தென்மாவட்டம் இன்றி தமிழகமே வளமடையும் என்றார்.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறையின் திட்டம் உருவாக்கம் பிரிவின் பொறியாளர் ஒருவர் கூறுகையில், தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 3.37 லட்சம் ஹெக்டேர் பாசனம் பெறும் வகையில் மாயனூரில் இருந்து ஒரு ஈர்ப்பு கால்வாய் திட்டத்தை அரசு முன் வைத்தது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் வெள்ள காலங்களில் காவிரியில் உபரிநீர் பெருக்கெடுத்து ஓடும்போது, சுமார் 6,000 கன அடி தண்ணீரை வாய்க்காலில் திருப்பி அவற்றை காவிரி முதல் குண்டாறு வரை நதிகளோடு இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இதற்காக பொதுப்பணித் துறைமூலம் விவசாய நிலத்தை விரிவாக கையகப்படுத்துதல், கால்வாய் தயாராக மதிப்பீடுகள், நிலச் சொந்தக்காரர்களுக்கு இழப்பீடு உள்ளிóட்டவை தொடர்பாக தென் மாவட்ட நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு சுமார் ரூ.3,516 கோடி என கடந்த 15 வருடங்களுக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. நாளுக்கு நாள் நிலங்களின் மதிப்பு அதிகரித்து வருவதால் முன்பு போட்ட திட்ட மதிப்பீடு அதிகரித்து வருகிறது. ஒரு மாநிலத்தில் மிகப்பெரிய திட்டம் நிறைவேற்றப்படும்போது அம்மாநிலம் தான் 70 சதவீத தொகையை ஒதுக்க வேண்டும். மீதித்தொகையை மத்திய அரசு மூலமோ அல்லது உலக வங்கி மூலமோ கடன் வாங்கி செயல்படுத்தலாம்.
இப்போதைக்கு இத்திட்டத்தை தொடக்கினால் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மதிப்பீடுத் தொகையை விட பல மடங்கு தொகை அதிகரிக்கும். இருப்பினும் தென் மாவட்டங்கள் செழுமை பெற காவிரி -குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம். இத்திட்டம் நிறைவேற அனைத்துக் கட்சியினரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT