தமிழ்நாடு

ஜனவரி இறுதியில் மாநில சிறார் கொள்கை வரைவு!

தேசிய சிறார் கொள்கையின் தொடர்ச்சியாக தயாரிக்கப்பட்டு வரும் மாநில அரசின் சிறார் கொள்கைக்கான வரைவு அறிக்கையை, ஜனவரி இறுதியில் விவாதத்துக்குக் கொண்டு வர,

சா. ஜெயப்பிரகாஷ்

தேசிய சிறார் கொள்கையின் தொடர்ச்சியாக தயாரிக்கப்பட்டு வரும் மாநில அரசின் சிறார் கொள்கைக்கான வரைவு அறிக்கையை, ஜனவரி இறுதியில் விவாதத்துக்குக் கொண்டு வர, தமிழ்நாடு மாநில சிறார் உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தேசிய சிறார் உரிமைகள் ஆணையம் சார்பில், கடந்த 2012-ல் தயாரிக்கப்பட்ட தேசிய சிறார் கொள்கையை, மத்திய அரசு 2013ஆம் ஆண்டு ஏற்றது. இதன் தொடர்ச்சியாக மாநிலங்களில் சிறார் கொள்கையை வரையறுத்து அறிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, தமிழ்நாடு மாநில சிறார் உரிமைகள் ஆணையம் கடந்த 2015 மார்ச் மாதம் சிறார் கொள்கை தயாரிக்கும் பணியைத் தொடங்கியது.
மாநிலம் முழுவதும் சிறார் நலனில் செயல்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், அரசுத் துறை அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்ற தொடக்க நிலை அறிமுகக் கூட்டத்துக்குப் பிறகு, 35 பேர் கொண்ட கொள்கை வரைவு தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது.
தனித்தனியே நடைபெற்ற பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு, கடந்த 2016 ஜூன் 24,25 ஆகிய தேதிகளில் மீண்டும் ஒரு விரிவான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 120 பேர் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து, கடைசிக் கட்டமாக மாநிலம் முழுவதும் சிறார்களையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணிகள் கடந்த மாதம் தொடங்கி தற்போது வரை 15 மாவட்டங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மாவட்டங்களில் செயல்படும் "சைல்டுலைன்- நோடல்' நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 60 சிறாரிடம் "சார்ட்' தாளில் கருத்துகளை எழுதிப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சியில் கடந்த 9,10 தேதிகளிலும், சேலம், தருமபுரியில் 10, 11 தேதிகளிலும் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
வரைவு அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்து ஆணையத்தின் உறுப்பினரும், வரைவுக் கொள்கை தயாரிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் டி. ரேவதி கூறியது:
வரைவுக் கொள்கை தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. ஜனவரி இறுதியில் நடைபெற உள்ள கொள்கை வரைவு தயாரிப்புக் குழு மற்றும் ஆணைய உறுப்பினர்கள் கூட்டங்களில் வரைவு அறிக்கை முன்வைக்கப்படும். இவற்றில் இறுதி செய்யப்படும் அறிக்கை மாநில அரசிடம் வழங்கப்படும் என்றார் அவர்.
தேசியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மாநில கொள்கை அறிக்கை தயாரிக்கப்படும் என்ற போதிலும், தமிழ்நாட்டுக்கே உரிய பிரத்யேக பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு அதற்கான அம்சங்களுடன் மாநில சிறார் நலக் கொள்கை இருக்கும் என வரைவு கொள்கை தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT