தமிழ்நாடு

தடையை நீக்க உடனடி அவசரச் சட்டம்: பிரதமருக்கு வைகோ கடிதம்

DIN

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பது: ஜல்லிக்கட்டு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட பிறகும், தீர்ப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது.
அதனால், மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்க அவசரச் சட்டம் கொண்டு வருவதற்குத் தயங்குகிறது.
ஆனால், ஜல்லிக்கட்டுப் பிரச்னை தமிழ்நாட்டில் தற்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது. தைப்பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படவில்லை என்பதால், தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் ஆளாகி விட்டனர். இதன் விளைவாகப் பல இடங்களில் இளைஞர்கள் தாங்களாகவே காளைகளைக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த முற்பட்டனர். இது இயல்பாகக் கிளர்ந்து எழுந்த உணர்ச்சி. ஆனால் பல இடங்களில் அந்த இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் காவல்துறையின் தடியடிப் பிரயோகத்திற்கும் ஆளாகினர். தை பொங்கலுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற போராட்டம் நீடிக்காது என அரசு அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தக் கோரும் போராட்டம் தமிழகம் எங்கும் காட்டுத்தீயெனப் பரவி வருகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் அறப்போர்க்களத்தில் குதித்துவிட்டனர். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. அம்மாணவர்கள், பெண்களும் ஆண்களும் வகுப்புகளுக்குச் செல்லாமல், தாங்களாக முன்வந்து, இடைவிடாது தொடர்ந்து அறவழிப்போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழர்களின் பண்பாட்டின் மீதும் நாகரிகத்தின் மீதும் ஜல்லிக்கட்டுத் தடையின் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டு விட்டதாகவே மாணவர் சமுதாயம் நியாயமான ஆத்திரம் அடைந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தாங்கள் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து, உடனடியாக ஒரு அவசரப் பிரகடனத்தின் மூலம், கொடிய விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்தப் பிரச்னையில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நிலைமை விபரீதமாகி, பின்னர் நடைபெறும் போராட்டம் அரசால் அடக்க முடியாத அளவுக்கு எல்லை மீறி விடும் என தெரிவித்துள்ளார் வைகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT