தமிழ்நாடு

வாழ்க்கைக்குப் பயன்படுவதையே படிக்க வேண்டும்: நடிகர் சிவகுமார்

DIN

நமது வாழ்க்கைக்கு எவை பயன்படுமோ அவற்றையே நாம் தேடிப் படிக்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் பேசினார்.
கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் திருவிழாவையொட்டி எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நடிகர் சிவகுமார் பேசியதாவது:
ஒரு நடிகரான எனக்கு இலக்கியவாதி என்ற தனித்த அடையாளம் எதுவும் இல்லை. இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று வருவதால் நூல் ஆர்வலர்கள்தான் அப்படிச் சொல்கின்றனர். எனது வாசிப்பு என்பது பெருங்கடலில் சிறு துளியைப் போன்றது. ஆனால், நான் வாசித்ததை மற்றவர்களுக்குச் சொல்லி வருவதாலோ என்னவோ என்னை இலக்கியவாதி என்று அழைக்கின்றனர்.
கம்ப ராமாயணம் பற்றிப் பேச வேண்டும் என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா கேட்டுக் கொண்டதால், சில பாடல்களை மனப்பாடம் செய்து பேசினேன். பின்னர், ராமாயணம், மகாபாரதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இருப்பினும் இந்தக் காப்பியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதிக காலம் பிடிக்கும்.
இந்தப் புராணக் கதைகள் ஒரு காலத்தில் மிகச் சிறிய கதைகளாக இருந்தன. அடுத்தடுத்து வந்த எழுத்தாளர்கள் இவற்றைப் பெரும் காப்பியங்களாக்கிவிட்டனர். இவற்றை நான் பேசி வருவதால் கடவுளை வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை. கடவுளை வணங்குவதற்கு ஒதுக்கும் நேரத்தில், அனைவரிடமும் அன்பு காட்டி, சமமாக மதித்து, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்தக் காப்பியங்களில் இருந்து மக்களுக்கு எவையெல்லாம் தேவையோ அவற்றையே நான் பயன்படுத்துகின்றேன். மக்களும் தங்களது வாழ்க்கைக்கு எவை பயன்படுமோ அவற்றை மட்டுமே தேடிப் பிடித்துப் படிக்கவேண்டும்.
வட மாநில , தென் மாநில நூல்களில் ஒழுக்க நெறிகள் குறித்து முரண்பாடுகள் இருந்தாலும், நமக்குத் தேவையானவற்றை மட்டும் அவற்றில் இருந்து எடுத்துக் கொண்டால் பிரச்னைகள் இல்லை என்றார்.
முன்னதாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பேசுகையில், வாசிப்புப் பழக்கம் பள்ளி, கல்லூரிகள் அளவில் நின்று விடக்கூடாது. ஒருவர் வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்தாலும், வாசிப்பைக் கைவிடக் கூடாது. பெரிய அதிகாரிகளாக இருப்பதாலேயே ஒருவர் எல்லாம் தெரிந்தவர் என்றாகிவிடாது.
அவ்வாறு தெரிந்து கொண்டதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கவிஞர் புவியரசு, குழந்தைக் கவிஞர் செல்லகணபதி, டாக்டர் எல்.பி.தங்கவேலு, புவனேசுவரம் தமிழ்ச் சங்கத் தலைவர் துரைசாமி மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT