தமிழ்நாடு

அதிமுக அரசு தொடர்ந்து 4 ஆண்டுகளும் நீடிக்கும்: முதல்வர் பழனிசாமி

DIN

தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 4 ஆண்டு காலமும் அதிமுக ஆட்சி நல்ல முறையில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1306 பயனாளிகளுக்கு ரூ.19.78 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமைந்த அதிமுக அரசு குறுகிய காலத்தில் கலைந்துவிடும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவற்றை எல்லாம் பொய்யாக்கும் விதமாக தற்போது தமிழகத்தில் சிறப்பான முறையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் நான்காண்டு காலமும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நல்ல முறையில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
முன்னேற்றப் பாதையில் எடப்பாடி தொகுதி: தமிழகத்தின் பின்தங்கிய தொகுதியாக இருந்த எடப்பாடி, தற்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது. குறிப்பாக, எடப்பாடி சரபங்கா நதியின் குறுக்கே புதிய பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் சரபங்கா நதியின் குறுக்கே ரூ. 6 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது என்றார் முதல்வர் பழனிசாமி.
எடப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
"நீட்' தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசின் சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேபோல ஏழை, எளிய மக்களைக் கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.
இதையடுத்து, கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி அணி மாறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "எதிர்காலத்தில் நல்ல நோக்கத்தில் தேடி வரும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்வோம்' என்றார் முதல்வர்.
மணல் விலை குறையும்: சேலம் நேரு கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசு பொருள்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வர் பேசியது:
முதல்வர் என்பது பதவி அல்ல; அது ஒரு பணி. அந்த வகையில் மக்களுக்குப் பணியாற்றும் தொண்டனாக இருக்க விரும்புகிறேன். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் தொடங்கி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை ஒவ்வொரு தேர்தலின்போதும் அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்த பெருமை சேலம் மாவட்டத்தைச் சாரும்.
இன்றைய விழாவில் 3,233 பயனாளிகளுக்கு ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல ரூ.28.58 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. மேலும் ரூ.11.65 கோடி மதிப்பில் உருவாகும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
சேலத்தில் 1978-இல் முதன் முதலாக அரசு பொருள்காட்சியை தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு பொருள்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த 1978 முதல் இதுவரை 183 அரசு பொருள்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 184- ஆவது பொருள்காட்சி நெல்லையில் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாகச் செயல்பட்டு வருகிறோம். இந்த ஆட்சி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஆட்சி. அடுத்த நான்கு ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் சேவை செய்வோம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியும், ஆன்மாவும், மக்கள் அன்பும் நீடிக்கும் வரை இந்த ஆட்சியை எவராலும் அசைக்கா முடியாது.
நாட்டிலேயே 100-க்கு 44 பேர் உயர்கல்வி படிக்கும் நிலையை உருவாக்கித் தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தற்போது தமிழகத்தில் நாளொன்றுக்கு 8,500 லோடு லாரி மணல் அள்ளப்படுகிறது. இன்னும் 10, 15 நாள்களில் 12,000 லோடு மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மணல் விலை குறையும். குறைந்த விலையில் மணல் பெறும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, அரசு பொருள்காட்சியில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் செய்தி- விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், காமராஜ், எம்எல்ஏக்கள் ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், ஆட்சியர் வா.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT