தமிழ்நாடு

கபிலரின் படைப்புகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

DIN

மானுடம் சிறக்க வழிகாட்டும் கபிலரின் அனைத்துப் படைப்புகளையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கேட்டுக்கொண்டார்.

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில், 42-ஆவது கபிலர் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் ஞாயிற்றுக்
கிழமை நடைபெற்றது.
விழாவில் முனைவர் அ.அறிவொளிக்கு கபிலர் விருதையும், ரூ.ஒரு லட்சம் பொற்கிழியையும் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:
முனைவர் அறிவொளிக்கு கபிலவாணர் விருது வழங்கியதன் மூலம் தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. தமிழுக்குப் பாராட்டுகள் புதிதல்ல. சங்க காலம் தொட்டு, பாராட்டுகள் தொடர்கின்றன. சமத்துவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
உலகத்தின் முன்னோடி மொழியான தமிழ், சிறந்த ஒழுங்கு நெறி, கலாசாரம், பண்பாட்டுடன் ஆன்மிகத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
எந்த அறிஞராலும் அளவிட முடியாத மேன்மையைக் கொண்டது தமிழ் மொழி. உலகிலுள்ள எந்த மொழிக்கும் இத்தகைய கலாசாரம், மனிதம் போன்றவை இருந்ததில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றுரைத்து சமத்துவத்தை பறைசாற்றிய ஒரே மொழி தமிழ்.
சிறந்த ஒழுங்கு நெறிகளைக் கொண்ட கபிலரின் பாடல்களைப் பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்தால், அவை உலகுக்கே வழிகாட்டும். படைப்பின் வீரியம் மட்டுமல்லாது, சிறப்பான கவிதைத் தன்மையையும் கொண்டது அவரது பாடல்கள். மானுடம் சிறக்க, அத்தனை படைப்புகளையும் தந்தவர் கபிலர். அவரது அனைத்துப் படைப்புகளையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கபிலர் என்றென்றும் சிறப்பிக்கப்பட வேண்டியவர் என்றார் நீதிபதி மகாதேவன்.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்:

இந்த நிகழ்ச்சியில், "இலக்கியச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:

விருது வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்கிறது அரசு. ஆனால், அதனை யாரும் விரும்பமாட்டார்கள். அவர்களைத் தேடி விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும். அதேபோல, முனைவர் அறிவொளியைத் தேடி நீங்களாகவே கபிலர் விருதை வழங்கியமைக்கு நன்றி. இவ்விருதை வழங்கியதால், திருக்கோவிலூரின் புகழும் உலகெங்கும் பரவும்.
சுமார் 730 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு பகுதியில் நதி நீர் இணைப்புக்கு முன்னோடியாக காலிங்கராயன் செயல்பட்டுள்ளார்.
இவர் பவானி ஆற்றுக்கும் நொய்யல் ஆற்றுக்கும் இடையே 56 மைல்கள் தொலைவுக்குக் கால்வாய் அமைத்துள்ளார். சாதாரண மனிதராக இருந்து இதனைச் சாதித்தார். ஆனால், அவரைப் பற்றி அங்குள்ள மாணவர்களுக்குக்கூடத் தெரியவில்லை. ஆசிரியர்களும் அதனைப் போதிக்கவில்லை.
அந்தந்த வட்டாரங்களின் வரலாறுகளை நமது இளைய தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதுபோல கபிலர் விழாவும் வரலாற்றைப் பதிவு செய்கிறது.
கபிலரின் பாடல்களை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்த்தால் தமிழ் கம்பீரமாக நிற்கும். சங்கத் தமிழ், புறநானூறு மற்றும் கபிலரை நம் பிள்ளைகளின் மனதில் பதிய வைத்தால், அவர்கள் தமிழின் தூதுவர்களாக ஆவார்கள்.
தமிழகத்தில் இளைஞர்கள் அதிகம். சாதி, சமயமற்ற சமுதாயத்தை ஏற்படுத்த இளைஞர்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டும். மக்களிடம் தமிழின் மேன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களிடமிருந்தும் இளைஞர்களை கற்றுவரச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
விழாவில் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் சீநி.தியாகராஜன், பொருளாளர் கா.நடராஜன், செயல் தலைவர் சீநி. பாலகிருஷ்ணன், பொதுச் செயலர் கீ.மூர்த்தி, நிலக்கிழார் ராகவேல், மருத்துவர் வீரநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காலையில் கபிலர் குன்று வழிபாடு, மங்கல இசை, திருமுறை மற்றும் சாரதா நம்பி ஆரூரன் தலைமையில் மகளிர் மன்றம் நடைபெற்றது.
கபிலர் விருது பெற்ற முனைவர் அ.அறிவொளி மாலை 5 மணியளவில் கபிலர் குன்றின் அருகே கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோயில் வளாகத்திலிருந்து அழைத்து வரப்பட்டார்.

இலக்கிய விழாக்களுக்கு அரசு உதவி: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

விழாவில், கபிலவாணர் விருது பெற்ற தமிழறிஞர் முனைவர் க. அறிவொளியைப் பாராட்டி தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியதாவது:
அகவை 90 கடந்த முதுபெரும் தமிழறிஞர் முனைவர் அ. அறிவொளிக்கு கபிலவாணர் விருது அளிப்பதன் மூலம் விருது பெருமை அடைகிறது. கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் தமிழ் பரப்பி வந்த மூத்த தமிழறிஞரான முனைவர் அறிவொளியின் இலக்கியப் பங்களிப்பு அளப்பரியது.
கபிலர் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்கிற தமிழ்ப்பற்றுடனான கோரிக்கையை முன்வைத்து முன்னாள் அமைச்சர் க. பொன்முடி நேற்று (சனிக்கிழமை) பேசியிருப்பது வரவேற்புக்கு உரியது. அதேநேரத்தில், இலக்கிய விழாக்களை அரசு விழாவாக நடத்தும்போது அது அதிகாரிகளின் விழாவாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. அதனால், இதுபோன்ற விழாக்களை அரசு விழாவாக நடத்தாமல் அரசின் ஆதரவுடன் ஆங்காங்கே இருக்கும் இலக்கிய அமைப்புகளின் விழாவாக நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.
புதுவையில் அரசின் உதவியுடன் கம்பன் விழாவும் ஏனைய இலக்கிய விழாக்களும் நடத்தப்படுகின்றன. அதேபோல, தமிழகமெங்கும் நடத்தப்படும் இலக்கிய விழாக்களுக்கு அரசு உதவித்தொகையை அறிவித்து அரசின் பங்களிப்புடனான இலக்கிய விழாக்களாக நடத்த முன்வர வேண்டும்.
விழா நடத்துவதற்கு இலக்கிய அமைப்புகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை அதற்கான அரங்கங்களை ஒப்பந்தம் செய்வது. இலக்கிய விழா நடத்துவதற்கானஅரங்கத்தை மாவட்டம்தோறும் உருவாக்கித் தர முடியுமேயானால் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் தமிழக அரசு செய்யும் மிகப் பெரிய பங்களிப்பாக அது பாராட்டப்படும்.
தமிழகம் எங்குமுள்ள கம்பன் கழகத்தினர் நல்லதொரு வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். எந்த ஊரில் கம்பன் விழா நடந்தாலும் ஏனைய ஊர்களிலுள்ள கம்பன் கழகங்களின் சார்பாக பிரதிநிதிகள் அந்த விழாவுக்கு வருகை தருகிறார்கள். அதேபோல, தமிழகத்தின் எந்தப் பகுதியில் இலக்கிய விழா நடந்தாலும் அதில் ஏனைய பகுதியிலுள்ள இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதன்மூலம் இலக்கிய அமைப்புகளுக்கிடையே பரஸ்பரம் நட்புறவும், இலக்கிய எழுச்சியும் ஏற்படும் என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT