தமிழ்நாடு

டிடிவி தினகரன் மீதான வழக்கு: குற்றச்சாட்டு பதிவுக்கு ஜூலை 31 வரை அவகாசம்

DIN

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுப் பதிவுக்கு வரும் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையை மூன்று மாத காலத்துக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
அதிமுக (அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவன இயக்குனரான டிடிவி தினகரன், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, முறையான வழிமுறைகளை பின்பற்றாமலும் ஒரு கோடிக்கு மேல் (1,04,95,313) அமெரிக்க டாலரை லண்டனில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பியுள்ளார்.
இதேபோன்று, ரிசர்வ் வங்கி அனுமதியின்றி ஹோட்டல் கட்டுவதற்கு 36,36,000 அமெரிக்க டாலர், 10 ஆயிரம் பவுண்ட் முதலீடு செய்தததாகவும், டிடிவி தினகரன் மீது அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ்(பெரா) அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த இரு வழக்குகளின் விசாரணையும் எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரு வழக்குகளிலும் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது.
இந்த நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்கு முன்பு தனது தரப்பு வழக்குரைஞர் வாதத்தை கீழமை நீதிமன்ற நீதிபதி கேட்ட வில்லை. ஆகையால், தன் மீதான குற்றச்சாட்டை பதிவை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஜூலை 17-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து, இந்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்க இயக்குநரக உதவி இயக்குநர் ஏ.சாதிக் முகமது நைனார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், டிடிவி தினகரனுக்கு எதிரான இந்த வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது. குற்றச்சாட்டு பதிவுக்கு முன்பாக, மனுதாரருக்கு போதுமான வாய்ப்புகள், காலம் மற்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இயற்கை நீதி பின்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் இரு தரப்பு வாதத்திற்கு பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஒத்தி வைத்திருந்தார்.
கால அவகாசம்: இந்த வழக்கில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். அதில், எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மனுதாரருக்கு எதிராகச் செய்த குற்றச்சாட்டுப் பதிவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் வாதிடுவதற்கு வாய்ப்பு வழங்கி, அன்றைய நாள் இறுதிக்குள் குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தினந்தோறும் என்ற அடிப்படையில் மேலும் இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தாமல் கீழ் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்டு, மூன்று மாதங்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT