ராமேசுவரம்: அப்துல் கலாம் மணிமண்டபத்தில் உள்ள கலாம் சிலை அருகே பைபிள் மற்றும் குர் ஆன் புத்தங்களை வைத்த விவகாரத்தில், கலாமின் பேரன் மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் செய்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கலாம் மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி திறந்து வைத்தார்.
இந்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற அப்துல் கலாம் சிலைகளில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கலாம் அவர்கள் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டு, அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாதி, மத, இன, மொழி பாகுபாடுகளை கடந்த தலைவரான அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை அருகிலிருப்பது போலும் இடம்பெற்றதும் தவறு என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருது தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தச் சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆன் மற்றும் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொண்டு சென்று வைத்தார்.
இதுகுறித்து கூறிய சலீம், 'கலாம் அவர்களது அலுவலகத்தில் எப்போதும் அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் இங்கே பகவத் கீதை மட்டும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்தச் சிலை அருகில் ஒரு கண்ணாடிப் பேழையில் குர் ஆனும், பைபிளும் வைக்கப்பட்டிருந்தது. எனவே அவற்றை எடுத்து இப்படி வைத்தேன். இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன். இதில் அரசியல் எதுவும் வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அனுமதி இன்றி அப்துல் கலாம் மணிமண்டபத்தில் உள்ள கலாம் சிலை அருகே பைபிள் மற்றும் குர் ஆன் புத்தங்களை வைத்ததாகவும், இதன் மூலம் இந்து மதத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும் கலாமின் பேரன் சலீம் மீது, இந்து மக்கள் கட்சி சார்பில் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் இந்த புகாரினை கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிலைஅருகே வைக்கப்பட்ட குர் ஆன்மற்றும் பைபிள் நூல்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.