முகப்பு
தமிழ்நாடு

இடைக்கால உத்தரவுக்கு பின் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: உயர் நீதிமன்றம்

அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகள் அனைத்தும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:39 PM
பகிர்:

அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகள் அனைத்தும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பதை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அங்கீகாரமில்லாமல் நிலங்கள், வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு, கடந்தாண்டு செப்டம்பர் 9 -ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்ய புதிய விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கி, மே 4 -ஆம் தேதி தமிழக அரசு இரண்டு அரசாணைகளை வெளியிட்டது. அவற்றை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது.
அதை ஏற்று, அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு உட்பட்டு, இடைக்காலமாக பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதேசமயம், இந்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகள் அனைத்தும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, திருநெல்வேலி லே அவுட் மற்றும் ரியல் எஸ்டேட் சங்கம் சார்பில் வழக்குரைஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி, 'நிலங்களை பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர்கள் மறுப்பதால், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என முறையிட்டார்.
அப்போது, அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு உட்பட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இடைக்கால உத்தரவுக்கு பின் செய்யப்படும் பத்திரப்பதிவுகள் அனைத்தும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. நிலத்தை பதிவு செய்ய மறுக்கும் முடிவை எதிர்த்து, உரிய நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →