சசிகலா புஷ்பா, குடும்பத்தினரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலாபுஷ்பாவின் வீட்டில் இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி இருவரும் வீட்டு வேலை செய்து வந்தனர்.
அப்போது, சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர்.
இதன்பேரில் சசிகலாபுஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சசிகலா புஷ்பாவிற்கு எதிரான புகாரைத் திரும்பப் பெறுமாறு சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மிரட்டுகின்றனர் என்று டிஜிபி அலுவலகத்தில் பானுமதி புகார் அளித்தார். அதன்பேரில் சசிகலா புஷ்பா எம்பி, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், தாயார் கௌரி ஆகியோர் மீது ஆள்கடத்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திசையன்விளை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூவரும் மனு செய்தனர். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பா எம்பி, அவரது கணவர் மற்றும் தாயாரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெ. நிஷாபானு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மூவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.